கேரள மோசடி மன்னன் திருச்சி விமான நிலையத்தில் கைது!

கேரள மோசடி மன்னன் திருச்சி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிங்கப்பூரில் இருந்து, திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்த ‘ஸ்கூட்’ விமான பயணிகளின் ஆவணங்களை இமிகிரேஷன் அதிகாரிகளும், அவர்களது உடமைகளை வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகளும் சோதனை செய்தனர்.

அப்போது, தேடப்பட்டு வரும் குற்றவாளி என ‘லுக் அவுட்’ நோட்டீஸ் கொடுக்கப்பட்ட ஒருவரை பிடித்து விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

அவரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், கோவை பாரதியார் பல்கலைக்கழகம் அருகே, காமராஜர் நகரைச் சேர்ந்த தேவராஜன் (48) என்பதும்,கேரளாவில் பல பேரை ஏமாற்றி, பல கோடி ரூபாய் மோசடி செய்த பேர்வழி என்பதும் தெரியவந்தது.

கடந்த, 2020ம் ஆண்டு கேரள மாநிலம் கொச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசார் இவர் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வந்த நிலையில், தலைமறைவானவர் ஆவார்.

அதையடுத்து, அவர் தேடப்படும் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு, அவர் குறித்த விபரங்கள் அனைத்து விமான நிலையங்களுக்கும் பகிரப்பட்டது.

இந்நிலையில், சிங்கப்பூரில் தலைமறைவாக இருந்த தேவராஜன், போலியாக பாஸ்போர்ட் தயார் செய்ததுடன், மொட்டையடித்து தனது அடையாளத்தையும் மாற்றிக் கொண்டுள்ளார்.

கோவை விமான நிலையம் சென்றால் பிடிபட்டு விடுவோம் என்று திருச்சி விமான நிலையம் வந்துள்ளார். ஆனால், இமிகிரேஷன் அதிகாரிகள் நடத்திய தீவிர சோதனையில் அவர் சிக்கிக் கொண்டார்.

இதுகுறித்து, கேரள மாநிலம் கொச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசாருக்கு, விமான நிலைய போலீசார் தகவல் கொடுத்தனர். திருச்சி விரைந்த கொச்சி போலீசார், அவரை கைது செய்து கேரளாவுக்கு அழைத்துச் சென்றனர்.

Leave A Reply

Your email address will not be published.