உள்ளாட்சித் தேர்தலில் சுயேட்சை: 125 பேரை கட்சியில் இருந்து நீக்கிய திரிணாமுல் காங்கிரஸ்

மேற்கு வங்க உள்ளாட்சித் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த மற்றும் சுயேட்சையாக போட்டியிட மனு தாக்கல் செய்திருந்த 125 பேர் அதிரடியாக கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றாலும் மீண்டும் கட்சியில் சேர்த்துகொள்ளப்பட மாட்டார்கள் என்று திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் வரும் 28ம் தேதி உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். எனினும், தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்காததால் சிலர் சுயேட்சையாக போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளனர். மேலும், சிலர் கட்சியின் வேட்பாளர்களுக்கு எதிராக செயல்படுவதாகவும் திரிணாமுல் காங்கிரஸ் தலைமைக்கு புகார் சென்றது.

இதையடுத்து, கட்சியில் இருந்து அதிரடியாக 127 பேரை நீக்கி உத்தரவிடப்பட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றாலும் கூட மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொள்ளப்பட மாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘சுயேட்சை வேட்பாளர்கள் சிலர் வெற்றி பெற்றால் திரிணாமுல் காங்கிரஸ் மீண்டும் வரவேற்கும் என நினைத்தால் அது தவறு. மேலும், சுயேட்சை வேட்பாளர்கள் யாரும் வெற்றி பெற மாட்டார்கள்,” என, அக்கட்சியின் பொதுச் செயலாளர் பார்த்தா சாட்டர்ஜி கூறியுள்ளார்.

கடந்த 2015ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 2 பேர் மட்டுமே சுயேட்சையாக போட்டியிட்டனர். ஆனால், இம்முறை எண்ணிக்கை 300ஐ எட்டியுள்ளது. எனவே, சுயேட்சையாக போட்டியிடும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர், தங்களது முடிவு தவறு என்றும் உள்ளாட்சித் தேர்தலில் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றும் பிரச்சாரம் மேற்கொண்டால் கட்சியில் இருந்து நீக்கப்படும் நடவடிக்கையில் இருந்து தப்பலாம் என்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.