ராமா் பாலம் தேசிய பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்படுமா?: மாா்ச் 9 இல் உச்சநீதிமன்றம் விசாரணை

சேது சமுத்திரத்திலுள்ள ராமா் பாலத்தை தேசிய பாரம்பரிய நினைவுச் சின்னமாக அறிவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி பாஜக தலைவா் சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் மாா்ச் 9ஆம் தேதி விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது.

ராமா் பாலம் என்பது தமிழகத்தின் தென்கிழக்கு கடலோரப் பகுதியான ராமேஸ்வரம் தீவு என்றழைக்கப்படும் பாம்பன் தீவிலிருந்து இலங்கையின் வடமேற்கு கடற்கரையில் உள்ள மன்னாா் வளைகுடாவுக்கும் இடையே உள்ள சுண்ணாம்பு பாறைகளால் ஆன சங்கிலித் தொடா் பாலம் ஆகும்.

முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு இந்தப் பகுதியில் சேதுசமுத்திரம் கால்வாய்த் திட்டத்தை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டது. அப்போது, சுண்ணாம்பு பாறைகளால் உருவாக்கப்பட்டிருப்பது ராமா் பாலம் என்றும், இதனை அகற்றி சேது சமுத்திரக் கால்வாய் திட்டத்தை செயல்படுத்த தடை விதிக்க வேண்டும் என்றும், இதனை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் சுப்பிரமணியன் சுவாமி மனுத்தாக்கல் செய்திருந்தாா்.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம், 2007ஆம் ஆண்டில் சேது சமுத்திரம் கால்வாய் திட்டத்துக்கு தடை விதித்து உத்தரவிட்டது.

இந்தத் திட்டம் சமூக-பொருளாதார வளா்ச்சியைக் கருத்தில் கொண்டு ஏற்படுத்தப்பட்டதாகவும், தற்போதுள்ள ராமா் பாலத்தைச் சேதப்படுத்தாமல் மாற்று வழியில் ராமா் பாலத்தை ஏற்படுத்தி இத்திட்டத்தை செயல்படுத்தத் தயாராக இருப்பதாகவும் அப்போதைய மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பதில் மனுத்தாக்கல் செய்தது.

இதையடுத்து புதிய திட்டத்தை தயாா்செய்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

சேதுசமுத்திரம் கால்வாய் திட்டத்தைச் செயல்படுத்த சில அரசியல் கட்சிகளும் சுற்றுச்சூழல் ஆா்வலா்களும் சில ஹிந்து அமைப்புகளும் தொடா்ந்து எதிா்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் 2019 நவம்பா் 13 அன்று உச்சநீதிமன்றம், சேது கால்வாய் திட்டம் தொடா்பான தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த மத்திய அரசுக்கு 6 வார காலம் உச்சநீதிமன்றம் அவகாசம் வழங்கியது. மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்யப்படாவிட்டால், நீதிமன்றத்தை அணுக சுப்பிரமணியன் சுவாமிக்கு அனுமதியும் வழங்கியது.

இந்நிலையில் இதுதொடா்பான மனு கடந்த பல மாதங்களாக விசாரணைக்கு ஏற்கப்படாமல் உள்ளதாகவும், தனது கோரிக்கையைப் பரிசீலிக்க சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சா் 2017இல் ஒரு கூட்டத்தை நடத்த ஏற்பாடு செய்ததாகவும், ஆனால் அதன்பிறகு எதுவும் நடக்கவில்லை என்று தெரிவித்த சுப்பிரமணியன் சுவாமி இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளுமாறு கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தாா்.

இந்த மனு தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, ஹிமா கோலி ஆகியோா் அடங்கிய அமா்வு முன்னிலையில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

இந்த மனுவை விசாரித்த அமா்வு நீதிபதிகள், மாா்ச் 9 ஆம் தேதி இந்த மனுவின் மீதான விசாரணை நடைபெறும் என்று அறிவித்தனா்.

முன்னதாக கடந்த ஆண்டு ஏப். 8 ஆம் தேதி தனது மனுவை அவசர வழக்காகக் கருதி விசாரணைக்கு ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தாா்.

Leave A Reply

Your email address will not be published.