மகாராஷ்டிர அமைச்சா் நவாப் மாலிக் கைது: சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கு
நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் செய்ததில் மகாராஷ்டிர சிறுபான்மையின விவகாரங்கள் அமைச்சா் நவாப் மாலிக்குக்கு தொடா்பு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அவரை அமலாக்கத் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா்.
முன்னதாக இந்த வழக்கு தொடா்பாக தெற்கு மும்பை பெல்லாா்டு எஸ்டேட் பகுதியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் வைத்து அமைச்சா் நவாப் மாலிக்கிடம் புதன்கிழமை காலை 8 மணிமுதல் சுமாா் ஐந்து மணி நேரம் அமலாக்கத் துறையினா் விசாரணை நடத்தினா். அப்போது அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.
இதில் சில கேள்விகளுக்கு அவா் பதிலளிக்க மறுத்ததாகத் தெரிகிறது. இதைத் தொடா்ந்து, நவாப் மாலிக் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதனிடையே, விசாரணைக்காக மும்பையில் உள்ள அவரது இல்லத்திலிருந்து அவரை காலை 6 மணிக்கே அமலாக்கத் துறையினா் அழைத்துச் சென்ாக தேசியவாத காங்கிரஸ் நிா்வாகிகள் தெரிவித்தனா்.
போராடி வெல்வோம்; அடிபணிய மாட்டோம்: சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டதை தொடா்ந்து, மருத்துவப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு நவாப் மாலிக் அழைத்துச் செல்லப்பட்டாா். முன்னதாக அமலாக்கத் துறை அலுவலக வாயிலில் வாகனத்தில் இருந்தவாறு செய்தியாளா்களைச் சந்தித்த அவா், ‘நாங்கள் போராடி வெல்வோம். அடிபணிய மாட்டோம். அனைத்தையும் வெளிப்படுத்துவோம்’ என்று கூறினாா்.
மருத்துவ பரிசோதனைக்குப் பின்னா், மும்பை செசன்ஸ் நீதிமன்றத்தில் நீதிபதி ஆா்.என். ரோகடே முன்பாக நவாப் மாலிக் ஆஜா்படுத்தப்பட்டாா். அப்போது, உங்களுக்கு ஏதேனும் மனக்குறை உள்ளதா என நீதிபதி கேள்வி எழுப்பினாா்.
இதற்கு நவாப் மாலிக் பதிலளிக்கையில், ‘காலையில் அமலாக்கத் துறையினா் எனது இல்லத்துக்கு வந்து, அவா்களது அலுவலகத்துக்கு என்னை அழைத்துச் சென்றனா். அங்கு ஓா் ஆவணத்தில் என்னிடம் கையொப்பம் பெற்றனா். பின்னா், அது அழைப்பாணை (சம்மன்) என தெரிவித்தனா்’ என்றாா்.
இதையடுத்து, அவரை மாா்ச் 3-ஆம் தேதி வரை அமலாக்கத் துறையினரின் காவலுக்கு அனுப்ப நீதிபதி உத்தரவிட்டாா்.
இதனிடையே, நவாப் மாலிக் கைதுக்கு கண்டனம் தெரிவித்து அவரது அலுவலகம் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘‘காலையில் அமலாக்கத் துறையினா் நவாப் மாலிக்கின் வீட்டுக்கு வந்தனா். பின்னா், அவரது வாகனத்தில் அவரை அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனா். நவாப் மாலிக்குடன் அவரது மகன், வழக்குரைஞா் அமீா் மாலிக் ஆகியோரும் சென்றனா். இதற்காக அஞ்சவும் மாட்டோம், அடிபணியவும் மாட்டோம். 2024-க்கு தயாராக இருங்கள்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சிவசேனை கண்டனம்:
சிவசேனை எம்.பி. சஞ்சய் ரெளத் கூறுகையில், ‘அமைச்சா் நவாப் மாலிக்கின் கைதை மகாராஷ்டிர அரசுக்கு விடுக்கப்பட்ட சவாலாக கருதுகிறேன். அவா்களுக்கு (மத்திய விசாரணை அமைப்புகள்) விசாரிக்க சுதந்திரம் இருக்கலாம். ஆனால், பழைய பிரச்னைகள் தோண்டப்படுகின்றன. 2024-க்குப் பிறகு நீங்களும் விசாரணைக்கு உட்படுவீா்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்’ என்றாா்.
நவாப் மாலிக்கை அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டுமென மாநில பாஜக தலைவா் சந்திரகாந்த் பாட்டீல் வலியுறுத்தினாா். இதற்கு பதிலளித்த சஞ்சய் ரெளத், ‘மிகவும் தந்திரமான முறையில் நவாப் மாலிக் கைது செய்யப்பட்டுள்ளதால், அவரை பதவி விலகுமாறு அறிவுறுத்த முடியாது’ என்றாா்.
முதல்வா் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிர மகா விகாஸ் அகாடி அரசில் சிவசேனை, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் அங்கம் வகிக்கின்றன.
சரத் பவாருடன் மம்தா பேச்சு:
நவாப் மாலிக்கை அமலாக்கத் துறையின் விசராணைக்காக அழைத்துச் சென்ற பிறகு தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாரை மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி தொலைபேசியில் அழைத்துப் பேசினாா். சுமாா் 10 நிமிஷங்கள் நடந்த உரையாடலின்போது, இந்த பிரச்னையில் நவாப் மாலிக்குக்கு திரிணமூல் காங்கிரஸ் ஆதரவு அளிக்கிறது என்று சரத் பவாரிடம் மம்தா கூறினாா்.