உக்ரைன் விவகாரம்: பிரதமர் மோடி நாளை(பிப்.26) உயர்நிலை ஆலோசனை
உக்ரைன் – ரஷியா போர் தொடர்பாக பிரதமர் மோடி தலைமையிலான உயர்நிலை ஆலோசனை நாளை(பிப்.26) நடைபெறுகிறது.
நேட்டோ ராணுவ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த ரஷியா, உக்ரைன் எல்லையில் சுமாா் 1.50 லட்சம் ராணுவ வீரா்களை குவித்ததால் எந்த நேரமும் போர்ச் சூழல் உருவாகும் அபாயம் இருந்து வந்தது.
அதன்படி, உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைளை மேற்கொள்ள ரஷிய அதிபர் விளாதிமிர் புதின் வியாழக்கிழமை உத்தரவிட்டதை அடுத்து, ரஷியப் படைகள், உக்ரைனில் போர் தொடுக்கத் தொடங்கியுள்ளன. நேற்று(பிப்.25) தலைநகர் கீவ் வரை ரஷியப் படைகள் முன்னேறியுள்ளன. அங்குள்ள செர்னோபில் அணு உலையையும் ரஷியப் படை கைப்பற்றியுள்ளது. இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
இதில் ரஷியா நடத்திய முதல்நாள் தாக்குதலில் 137 உக்ரைன் ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளதாக உக்ரைன் அதிபர் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி தகவல் தெரிவித்ததுடன் 316 பேர் காயமடைந்துள்ளதாகவும் கூறினார்.
தற்போது, நிலைமை மேலும் மோசமாகி வருவதைத் தொடர்ந்து பிரதமர் மோடி உக்ரைன் விவகாரம் குறித்து முக்கிய அதிகாரிகள், அமைச்சர்களுடன் நாளை(பிப்.26) உயர்நிலை ஆலோசனையில் ஈடுபட உள்ளார்.
இக்கூட்டத்தில் உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்கும் வழி குறித்தும் முடிவு செய்யப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.