தொடரும் பதற்றம்…உக்ரைன் அதிபருடன் பிரதமர் மோடி பேசியது என்ன?
இரண்டாம் உலக போருக்கு பிறகு நடைபெறும் மிக பெரிய தாக்குதலாக உக்ரைன் மீதான ரஷியாவின் படையெடுப்பு கருதப்படுகிறது. உக்ரைன் தலைநகர் கிவ்வை நோக்கி ரஷியா ராணுவம் தொடர்ந்து முன்னேறி வரும் நிலையில், அவர்களுக்கு எதிராக உக்ரைன் பாதுகாப்பு படை பதிலடி அளித்துவருகிறது.
இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கியுடன் பிரதமர் மோடி பேசியுள்ளார். அப்போது, “ரஷியாவின் மூர்க்கத்தனத்திற்கு உக்ரைன் எப்படி பதிலடி கொடுத்துவருகிறது” என்பது குறித்து மோடியிடம் விவரித்ததாக ஸெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார். ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் அரசியல் ரீதியான ஆதரவு அளிக்க கேட்டு கொண்டுள்ளதாகவும் மூர்க்கத்தனத்தை ஒன்றினைந்து நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்களின் பாதுகாப்பு குறித்து பிரதமர் மோடி ஸெலென்ஸ்கியிடம் கவலை தெரிவித்ததாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அங்கிருக்கும் இந்திய மக்களை பாதுகாப்பாக மீட்பதற்கு உக்ரைன் விரைவாக உதவ வேண்டும் என்றும் மோடி கேட்டு கொண்டுள்ளார்.
அதேபோல, வன்முறையை கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு திரும்பும்படி ஸெலென்ஸ்கியிடம் மோடி கோரிக்கை விடுத்ததாகவும் பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. அதேபோல, அமைதியை மீட்டெடுக்க தேவையான அனைத்தையும் இந்தியா செய்யும் என்றும் உத்தரவாதம் அளித்துள்ளார்.