இலங்கையின் 13ஆவது பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றார்

ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ இலங்கையின் 13ஆவது பிரதமராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

இப்பதவிப் பிரமாண நிகழ்வு இன்று (09) முற்பகல் வரலாற்று முக்கியத்தும் வாய்ந்த களனி ரஜ மகா விகாரை புனித பூமியில் இடம்பெற்றது.

நான்காவது தடவையாகவும் பிரதமராக தெரிவுசெய்யப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷ 2005 முதல் 2015 வரை இரண்டு முறை நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவி வகித்தார்.

மஹிந்த ராஜபக்ஷ ஐம்பது வருட அரசியல் வரலாற்றைக் கொண்டவர். 1970ஆம் ஆண்டு பாராளுமன்றத்திற்கு தெரிவான அவர், 1995ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரை அமைச்சரவை அமைச்சராக குறிப்பிடத்தக்க முக்கிய பணிகளை நிறைவேற்றினார்.

2004 ஏப்ரல் மாதம் 06ஆம் திகதி முதன் முறையாக பிரதமராக தெரிவுசெய்யப்பட்ட அவர், 2018 ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி இரண்டாவது முறையாகவும், 2019 நவம்பர் மாதம் 21ஆம் திகதி மூன்றாவது முறையாகவும் பிரதமராக பதவிப் பிரமாணம் செய்தார்.

பத்து வருட காலம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவி வகித்த மஹிந்த ராஜபக்ஷ, சுமார் 30 வருட காலமாக நாட்டை ஆட்கொண்டிருந்த பயங்கரவாதத்தை முழுமையாக ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுத்து, நாட்டை துரித அபிவிருத்தியை நோக்கி இட்டுச்சென்றார்.

குருணாகல் மாவட்டத்தில் இம்முறை பொதுத் தேர்தலில் போட்டியிட்ட மஹிந்த ராஜபக்ஷ 527,364 விருப்பு வாக்குகளை பெற்றுக்கொண்டார். இது இலங்கையில் பொதுத் தேர்தலொன்றில் அபேட்சகர் ஒருவர் பெற்றுக்கொண்ட அதிக விருப்புவாக்குகள் என வரலாற்றில் பதிவானது.

இரண்டு முறை நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவி வகித்து பிரதமர் பதவிக்கு நான்காவது தடவையாகவும் தெரிவுசெய்யப்பட்ட முதலாமவராக மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் வரலாற்றில் இடம்பிடித்தார்.

மகா சங்கத்தினர் பிரித் பாராயணம் செய்து பிரதமருக்கு ஆசிர்வாதம் வழங்கினர். பதவிப் பிரமாண நிகழ்வை தொடர்ந்து ஜனாதிபதியும் பிரதமரும் விகாரைக்கு சென்று சமயக் கிரியைகளில் ஈடுபட்டனர்.

பிரதமர் பதவிப் பிரமாண நிகழ்வின்இலங்கையின் 13ஆவது பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்ற பின்னர் ஜனாதிபதி பிரதமரை சூழ திரண்டிருந்த மக்களிடம் சென்று அவர்களுக்கு தனது வணக்கத்தை தெரிவித்தார்.

மகாசங்கத்தினர் மற்றும் ஏனைய சமயத் தலைவர்கள், ஆளுநர்கள், ஜனாதிபதியின் செயலாளர், தூதுவர்கள், ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியிலிருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ள, புதிய அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும் புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Comments are closed.