கோவை மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் உடன்பாடு: முடிவுக்கு வந்த விசைத்தறி உரிமையாளர்கள் போராட்டம்
கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்டங்களில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் கடந்த ஐனவரி 9 ம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். கடந்த நவம்பர் மாதம் அமைச்சர் சாமிநாதன் முன்னிலையில் நடைபெற்ற கூலி உயர்வு பேச்சுவார்த்தையில் சோமனூர் ரகத்திற்கு 23 சதவீதமும், இதர ரகங்களுக்கு 20 சதவீதம் ஒப்பந்தம் கையெழுத்தாகியது. இந்த நிலையில் அந்தக் கூலி உயர்வினை கொடுக்க மறுக்கும் ஜவுளி உற்பத்தியாளர்களைக் கண்டித்து இந்த வேலை நிறுத்த போராட்டமானது நடத்தப்பட்டது.
இரு மாவட்டங்களிலும் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் வேலைநிறுத்தம் காரணமாக நிறுத்தப்பட்டதால், இதில் நேரடியாகவும் மறைமுகமாகவும் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்தனர். ஒரு நாளைக்கு 50 கோடி ரூபாய் வீதம் சுமார் 2,500 கோடி ரூபாயக்கும் அதிகமாக உற்பத்தி இழப்பு ஏற்பட்டது.
கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் கூலி உயர்வு கேட்டு தொடர் போராட்டங்கள் நடத்தி வந்தனர். ஆர்ப்பாட்டம் , தொடர் உண்ணாவிரதம் என பல கட்டங்களாக போராட்டம் நடத்திய அவர்கள் இறுதியாக கஞ்சித்தொட்டி திறக்கும் போராட்டத்தையும் அறிவித்திருந்தனர்.
இந்நிலையில் விசைதறியாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர கோவை, திருப்பூர் மாவட்ட ஆட்சியர்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்நிலையில் இன்று மாலை கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் முன்னிலையில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இந்த பேச்சுவார்த்தையில் சோமனூர் ரகத்திற்கு 19 சதவீதமும், இதர ரகங்களுக்கு 15 சதவீதம் கூலி உயர்வு வழங்குவது என உடன்பாடு எட்டப்பட்டது. மாவட்ட ஆட்சியர் சமீரன் முன்னிலையில் ஜவுளி உற்பத்தியாளர்களும், கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்களும் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இந்நிலையில் நாளை பொதுக்குழுவைக் கூட்டி கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தை நிறைவு செய்ய உள்ளனர். 52 நாட்களாக வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வந்த நிலையில் இன்றைய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.