உக்ரைனில் இந்திய மாணவர்கள் யாரும் பணய கைதிகளாக இல்லை – வெளியுறவு அமைச்சகம்
உக்ரைனில் இந்திய மாணவர்கள் யாரும் பணயக் கைதிகளாக இருப்பதாக தகவல் ஏதும் வரவில்லை என இந்திய வெளியுறவு அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. உக்ரைனில் இருக்கும் இந்திய மாணவர்களுடன், தூதரகம் தொடர்பில் இருப்பதாக, மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி தெரிவித்துள்ளார்.
உக்ரைன் அதிகாரிகளின் ஒத்துழைப்புடன், ஏராளமான இந்திய மாணவர்கள் நேற்று கார்கிவ் நகரில் இருந்து வெளியேறி உள்ளதாகவும், எந்த மாணவரும் பணயக் கைதியாக அங்கு இருப்பதாக தகவல் இல்லை எனவும் தெரிவித்திருக்கிறார். கார்கீவ் மற்றும் பிற நகரங்களில் இருந்து, உக்ரைனின் மேற்கு மாகாணங்களுக்கு இந்திய மாணவர்கள் செல்லும் வகையில், கூடுதல் ரயில்களை இயக்க உக்ரைன் அரசு அதிகாரிகளிடம் வலியுறுத்தி உள்ளதாக அரிந்தம் பக்சி தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக உக்ரைனில் இருந்து ஏராளமான மாணவர்கள் தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளதாகவும், ரஷ்யா, ருமேனியா, போலந்து, ஹங்கேரி, ஸ்லோவோகியா உள்ளிட்ட நாடுகளுடன் இந்தியா தொடர்ந்து ஒத்துழைப்புடன் செயல்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். உக்ரைனின் மேற்கு பகுதிக்கு செல்லும் இந்தியர்களுக்கு இடவசதி செய்து தரும் அப்பகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அரிந்தம் பக்சி தெரிவித்துள்ளார்.
மேலும் உக்ரைன் நாட்டில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களை மீட்பதற்கு தேவையான நடவடிக்கைகளை, விரைந்து எடுக்க வேண்டும் என, அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை ஆய்வு செய்த அவர், துரிதமாக செயல்பட்டு தாமதமின்றி மாணவர்களை மீட்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.