உக்ரைன் அணுமின்நிலையத்தை பாதுகாக்க முயன்ற பொதுமக்கள் மீது ரஷிய ராணுவம் துப்பாக்கிச் சூடு.
உக்ரைனில் உள்ள எனர்ஹோடர் பகுதியை கைப்பற்றும் முயற்சியில் ரஷிய படைகள் முயற்சி செய்து வருகின்றனர். இந்த இடத்தில் தான் உக்ரைனின் மிகப்பெரிய அணுமின்நிலையமான சபோரிஷியா அணுமின்நிலையம் உள்ளது. இந்த அணுமின்நிலையத்தில் நாட்டின் 15 உலைகளில் ஆறு உலைகள் உள்ளன. 1986-ம் ஆண்டு உலகின் மிக மோசமான அணுசக்தி பேரழிவு நடந்த செர்னோபில் அணுமின் நிலையத்தை ரஷியா ஏற்கனவே கைப்பற்றியுள்ளது.
இந்த நிலையில் சபோரிஷியா அணுமின் நிலையத்தை கைப்பற்றும் முனைப்பில் ரஷிய படைகள் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களிடம் இருந்து பாதுகாக்கும் முயற்சியில் உக்ரேனிய பொதுமக்கள் கிழக்கு உக்ரைனில் உள்ள சபோரிஷியா அணுமின்நிலையத்திற்கு செல்லும் பிரதான பாதையில் தற்காலிக தடைகளை ஏற்படுத்தியுள்ளனர்.
ஏறக்குறைய ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு பழைய கார்கள், குப்பை லாரிகள் மற்றும் மணல் மூட்டைகளைக் கொண்டு இந்த தற்காலிக தடைகளை ஏற்படுத்தியுள்ளனர்.
ரஷிய படைகள் முன்னேறுவதை தடுக்க தற்காலிக தடைகளுக்கு முன்னால் பொதுமக்கள் உக்ரேனிய கொடிகளை பிடித்துக்கொண்டு ஒரு மனித தடுப்பை உருவாக்கி ரஷியாவிற்கு எதிராக முழக்கமிட்டனர். இந்த நிலையில் நேற்று ரஷிய படைகள் முன்னேறி செல்லவதற்காக அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனால் அந்த பகுதி கரும்புகை மண்டலமாக காணப்பட்டது.
கிரீன்பீஸ் இன்டர்நேஷனல் நிபுணர்களின் ஆய்வில், சபோரிஷியாவில் உள்ள அணு உலை கட்டுப்பாட்டு மற்றும் குளிரூட்டும் அமைப்புகள் வெடித்தால், 2011-ல் ஜப்பானில் உள்ள புகுஷிமாவில் ஏற்பட்டதை விட மோசமான பேரழிவை உருவாக்கக்கூடும் என்று தெரிவித்துள்ளனர்.