மரியுபோல் நகருக்கான சண்டை தீவிரமாகும் அறிகுறி…!

அங்கு சிக்குண்ட மக்களை மீட்க ரஷ்யா குறுகிய போர் நிறுத்தம்! உக்ரைன் படை நடவடிக்கையின் பத்தாவது நாளான இன்று ரஷ்யப்படைகள் குறுகிய கால யுத்த நிறுத்தம் ஒன்றை அறிவித்திருக்கின்றன. போரில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்தமரியுபோல்(Mariupol) துறைமுக நகரின் ஒரு பகுதியை ரஷ்யப்படைகள் சுற்றி வளைத்துள்ளன.

அங்கு பெரும் எண்ணிக்கையான சிவிலியன்கள் சிக்குண்டுள்ளனர் என்று நகர மேயர் தெரிவித்திருக்கிறார். அங்கிருந்தும் அருகே உள்ள வோல்நோவஹா(Volnovakha) நகரில் இருந்தும் சிவிலியன்கள் பாதுகாப்பாக வெளியேற வசதியாக இன்று உக்ரைன் நேரப்படி காலை ஒன்பது மணி முதல்
ஆறு மணி நேரத்துக்கு தாக்குதல் நிறுத்தம் ஒன்றை ரஷ்யப்படைகள் அறிவித்திருக்கின்றன.

ரஷ்யப் பாதுகாப்பு அமைச்சை ஆதாரம்காட்டி மொஸ்கோ செய்தி நிறுவனங்கள் இத்தகவலை வெளியிட்டுள்ளன. உக்ரைனின் தென் கிழக்கே அமைந்துள்ள மரியுபோல் மீது இறுதிக்கட்டத் தாக்குதலைத் தொடுப்பதற்கு முன்னராக சிவிலியன் இழப்புகளைத் தவிர்க்கும் நோக்குடன் மொஸ்கோ இந்த அறிவிப்பை விடுத்திருப்பதாக நம்பப்படுகிறது அங்கு சுமார் 4லட்சத்து 50 ஆயிரம் பேர் சிக்குண்டுள்ளனர்.

மரியுபோல் நகரின் வீழ்ச்சி ரஷ்யப் படைகளுக்கு பாதுகாப்பான விநியோக வழி ஒன்றைத் திறக்கும் என்பதால் அந்த நகருக்கான சண்டை மிகுந்த முக்கியத்து
வம்வாய்ந்தது.தன்னாட்சிப் பிரதேசங்கள் அமைந்துள்ள டொனெஸ்க் பிராந்தியத்தில் உக்ரைனின் பிடியில் உள்ள பெரிய நகரம் இதுவாகும். இதேவேளை, ரஷ்யா உக்ரைன் தரப்புகளுக்கு இடையே நேற்று பெலாரஸ் நாட்டின் போலந்து எல்லையில் நடைபெற்ற இரண்டாவது சுற்று சமாதானப் பேச்சுக்களும் முன்னேற்றம் ஏதும் இன்றி முடிவடைந்தன.

மோதல் பகுதிகளில் இருந்து சிவிலியன்கள் வெளியேறுவதற்கான வழிகளைத் திறப்பதற்கு இப் பேச்சுக்களில் ரஷ்யா இணங்கியிருந்தது. உக்ரைனுடன் மூன்றாவது கட்டப் பேச்சுக்களையும் கூடிய விரைவில் நடத்துவதற்கான விருப்பத்தை ரஷ்யா வெளியிட்டிருக்கிறது. ஆனால் ஜேர்மனியின் சான்சிலர் ஒலப் சோல்ஸுடன் நேற்றுப் பேசியபுடின், போரை நிறுத்துவதற்கான எந்தப் பேச்சுக்களும் முன் நிபந்தனையாக ரஷ்யாவின் அனைத்து நிபந்தனைகளும்
ஏற்கப்பட வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.

Leave A Reply

Your email address will not be published.