உக்ரைன்: 11 சிறப்பு விமானங்களில் 2,135 இந்தியர்கள் இன்று மீட்பு
உக்ரைனின் அண்டை நாடுகளிலிருந்து 11 சிறப்பு பயணிகள் விமானம் மூலம் 2,135 பேர் இந்தியா அழைத்து வரப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷியா ராணுவத் தாக்குதலைத் தொடங்கியதையடுத்து, அங்கு சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்கும் பணி துரிதப்படுத்தப்பட்டது. உக்ரைனின் அண்டை நாடுகள் வழியாக சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியர்கள் அழைத்து வரப்பட்டு வருகின்றனர்.
ஏறத்தாழ 13 ஆயிரம் பேர் நாடு திரும்பியுள்ளதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் நேற்று (சனிக்கிழமை) அறிவித்திருந்தது.
இந்த நிலையில், உக்ரைனின் அண்டை மாநிலங்களிலிருந்து 11 சிறப்பு பயணிகள் விமானம் மூலம் 2,135 பேர் இன்று இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த பிப்ரவரி 22-ம் தேதி முதல் சிறப்பு விமானங்கள் மூலம் இதுவரை 15,900 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, உக்ரைனிலுள்ள இந்தியர்கள் தகவல் படிவத்தை உடனடியாக நிரப்புமாறு உக்ரைனுக்கான இந்தியத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.