‘ஆசிரியர்கள் அடிக்கிறார்கள்’ : போலீஸ் எஸ்.ஐ.யிடம் புகார் அளித்த 3ம் வகுப்பு மாணவன்
தன்னை ஆசிரியர்கள் அடிப்பதாக காவல் நிலையத்திற்கு வந்து 3ம் வகுப்பு மாணவன் ஒருவன் போலீஸ் எஸ்ஐயிடம் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. மாணவனை அழைத்து கொண்டு பள்ளிக்கு சென்ற போலீசார் அவனை அடித்த ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளனர்.
தெலங்கானா மாநிலம் மகபூப்பா நகர் மாவட்டத்திலுள்ள பையாரம் நகர காவல் நிலையத்திற்கு நேற்று அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் மூன்றாம் வகுப்பு மாணவன் அனில் வந்துள்ளான்.
முக கவசம் அணிந்து கரோனா விதிமுறைகளை கடைப்பிடித்து காவல் நிலையத்திற்கு வந்த அந்த சிறுவனை பார்த்த போலீசார், காவல்நிலையத்திற்கு வந்து இருப்பதற்கான காரணம் பற்றி கேட்டனர்.
அப்போது தன்னுடைய ஆசிரியர்களான சன்னி, வெங்கட் ஆகியோர் தன்னை அடிப்பதாக அவன் போலீசாரிடம் கூறினான்.
முக கவசம் அணிந்து காவல் நிலையத்திற்கு வந்ததுடன் தயக்கமில்லாமல் ஆசிரியர் அடிப்பதாக குற்றச்சாட்டுகளை மாணவர் அனில் தெரிவித்தார். இதைக் கேட்ட போலீசார் அவனை அழைத்து கொண்டு பள்ளிக்கு சென்றனர். அங்கு தன்னை அடித்த ஆசிரியர்கள் இரண்டு பேரையும் அந்த மாணவர் அடையாளம் காட்டினான்.
மாணவரை அடித்த ஆசிரியர்கள் இரண்டு பேருக்கும், இது போல் மாணவர்களை அடித்து துன்புறுத்த கூடாது என்று அறிவுரை கூறியதுடன் அந்த மாணவருக்கும் அறிவுரை கூறிய போலீசார் அங்கிருந்து சென்றனர். இதுதொடர்பாக மாணவர் அனில் பவ்யத்துடன், போலீஸ் எஸ்ஐயிடம் புகார் அளிக்கும் காட்சிகள் இணையத்தில் அதிகம் ரசிக்கப்படுகிறது.