ரஸ்ய-உக்ரைன் போரும் : சாதகமான பார்வைகளும் : சுவிசிலிருந்து சண் தவராஜா

“யுத்தத்தில் முதலில் பலியாவது உண்மை” எனக் காலங்காலமாகக் கூறப்பட்டுவரும் விடயம் ரஸ்ய-உக்ரைன் யுத்தத்திலும் மெய்யப்பிக்கப்பட்டு வருகின்றது.

உண்மைக்குப் புறம்பான தகவல்கள் பிரதான ஊடகங்களில் கூடப் பகிரப்பட்டு வருகின்றன.

சமூக ஊடகங்கள் மலிந்துவிட்ட இன்றைய காலகட்டத்தில் அவற்றினால் ஒருசில நிமிடங்கள் கூடத் தாக்குப்பிடிக்க முடியவில்லை. அத்தகைய செய்திகளின் உண்மைத் தன்மையை போரிடும் தரப்புகள் அன்றி வெளியே உள்ள ‘நெட்டிசன்’களே கண்டுபிடித்து அம்பலப்படுத்தி வருகின்றனர். முன்னர் எப்போதோ நடந்த சம்பவங்களையும், வேறுவேறு நாடுகளில் நடந்த சம்பவங்களையும் உக்ரைன் மோதலோடு தொடர்பு படுத்தி வெளியிடும் அவலம் ஒருபுறம் இருக்க, இணைய விளையாட்டுகளில் உள்ள காணொளியை வெளியிட்டு “6 ரஸ்ய விமானங்களைச் சுட்டு வீழ்த்திய உக்ரைன் வீரர்” எனத் தெரிவித்த பதிவு பெரும்பாலான ஊடகங்களில் செய்தியாகியமை(?) மிகப் பெரிய நகைச்சுவையாகியது.
அதேபோன்று பாம்புத் தீவு என அழைக்கப்படும் உக்ரைனுக்குச் சொந்தமான ஒரு சிறிய தீவை ரஸ்யப் படைகள் கைப்பற்றிய வேளையில், ரஸ்யக் கடற்படைக் கப்பலை எதிர்த்துநின்ற 13 உக்ரைன் வீரர்கள் ரஸ்யர்களால் கொல்லப்பட்டார்கள் என அறிவித்திருந்த உக்ரைன் அரசுத் தலைவர் விளாடிமிர் ஸெலன்ஸ்கி, அவர்களுக்கு கௌரவப் பட்டங்களையும் வழங்கியிருந்தார்.

இந்தச் செய்தி பெரும்பாலும் மேற்குலகின் அனைத்து ஊடகங்களிலும் வெளியாகியிருந்தது.

மரணத்தைத் தழுவிய(?) வீரர்களுக்கு புகழஞ்சலி கூடச் செலுத்தப்பட்டிருந்த நிலையில், தனது செய்தியை(?) உக்ரைனின் அதிபர் மீளப் பெற்றுக்கொண்டார்.

பாம்புத் தீவில் இருந்த 83 உக்ரைன் படையினரும் சரணடைந்த நிலையில் அவர்கள் அழைத்துவரப்பட்ட காணொளியை ரஸ்யா வெளியிட்டிருந்த நிலையில் அவர் தனது அறிவிப்பை மீளப் பெற்றுக் கொண்டார். ஆனால், அவரோ அல்லது அவரின் தகவலை அடியொற்றி செய்திகளை வெளியிட்ட நிறுவனங்களோ தமது தவறான தகவலுக்கு வருத்தம் எதனையும் இதுவரை தெரிவிக்கவில்லை.

இதே நிலைமை போரில் கொல்லப்பட்ட பொதுமக்கள் மற்றும் படையினரின் எண்ணிக்கை தொடர்பிலும் நீடித்து வருகின்றது.

போர் ஆரம்பமாகி ஒரு வாரத்துக்கு மேலாகியுள்ள நிலையில் ரஸ்யா வெளியிட்ட அறிக்கையில் 498 படையினர் கொல்லப்பட்டும், 1,600 பேர் வரையானோர் காயமடைந்தும் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே அறிக்கையில் உக்ரைன் தரப்பில் 2,870 படையினர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 3,700 பேர் காயமடைந்துள்ளதாகவும், 572 பேர் சரணடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, உக்ரைன் வெளியிட்டுள்ள தகவல்களின் பிரகாரம் 5,800 வரையான ரஸ்யப் படைகள் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுபுறம், சரணடைந்த உக்ரைன் படையினரை சர்வதேச போர் நியமங்களுக்கு அமைவாக ரஸ்யா நடத்திவரும் நிலையில், உக்ரைன் படையினரால் சிறைபிடிக்கப்பட்ட ஓரிரு ரஸ்யப் படையினர் துன்புறுத்தலுக்கு ஆளாகும் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் உலாவருவதைப் பார்க்க முடிந்தது.

மேற்குலக ஊடகங்களில் வரும் செய்திகள் யாவும் போரில் ரஸ்யப் படைகள் பின்னடைவைச் சந்தித்து வருவது போலவும், உக்ரைன் படைகள் தீரத்துடன் முறியடிப்புப் போரில் ஈடுபட்டுவருவது போலவும் ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி உள்ளன.

மறுபுறத்தே அதே செய்தி ஊடகங்கள் உக்ரைன் மக்களில் 10 இலட்சம் பேர் வரையானோர் அகதிகளாக அயல் நாடுகளுக்கு சென்றுள்ளதாகவும் தெரிவித்து வருகின்றன.

உக்ரைன் நாட்டு இராணுவம் போரில் வெற்றிபெறும் நிலையில் இருக்கும்போது எதற்காக அகதிகள் பெரும் உண்ணிக்கையில் வெளியேற வேண்டும் என்ற கேள்வியை யாரும் எழுப்பியதாகத் தெரியவில்லை.

“அகதிகள் என்றாலேயே அவர்கள் வேண்டத்தகாதவர்கள், அவர்களால் மேற்குலகுக்குப் பொருளாதாரச் சுமை ஏற்படுகின்றது” என ஒருசில மாதங்களுக்கு முன்னர் பேசிய அதே ஊடகங்கள் இன்று “நீலக் கண்களும், வெள்ளைத் தோலும் கொண்ட சகோதரர்களை எப்பாடு பட்டாவது பாதுகாக்க வேண்டும்” எனப் பக்கம் பக்கமாக எழுதி வருகின்றன. ஐரோப்பா முழுவதும் அவர்கள் இருகரம் கூப்பி வரவேற்கப்படுகின்றனர்.
ஒருசில மாதங்களுக்கு முன்னர், இதே பிராந்தியத்தில் பெலாரஸ் எல்லையில் கடுங் குளிருக்கு மத்தியில் சாவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்ட, பல கிலோ மீற்றர் தூரத்தை நடந்தே கடப்பதற்கு நிர்ப்பந்திக்கப்பட்ட ஆயிரக்கணக்கான ஆப்கான், ஈராக் மற்றும் ஆபிரிக்க அகதிகள் தொடர்பில் இதே ஊடகங்கள் எவ்வாறு நடந்து கொண்டன என்பதைக் கேட்பார் யாருமில்லை.

தனக்குச் சாதகமற்ற சூழல் எனத் தெரிந்தும், பாரிய விமானப் படையைக் கொண்டுள்ள போதிலும் அதனைப் பயன்படுத்தாமல் தரை மார்க்கமாகவே அதிகம் போரில் ஈடுபட்டுள்ள ரஸ்யா, பொதுமக்களின் பாதுகாப்பைக் கவனத்தில் கொண்டே அவ்வாறு செயற்படுகின்றது என்பதைக் கூடப் புரிந்து கொள்ளாமல், அது ரஸ்யப் படைகளின் பலவீனம் போன்றும், உக்ரைன் படையினரின் வல்லமை போன்றும் செய்தி நிறுவனங்கள் கொண்டாடுவதையும் பார்க்க முடிகின்றது.

இத்தகைய செய்தி நிறுவனங்கள், கடந்த 30 ஆண்டுகளில் அமெரிக்காவும், நேட்டோவும் இணைந்து, முன்னைநாள் யூகோஸ்லாவியா, ஈராக், ஆப்கானிஸ்தான், லிபியா, சிரியா உள்ளிட்ட நாடுகளில் நடத்திய குண்டுவீச்சுகள் பற்றியோ கொன்றொழித்த பல இலட்சக்கணக்கான மக்கள் பற்றியோ பேசுவதில்லை.

நொடிக்கொரு தடவை கருத்துச் சுதந்திரம் பற்றிப் பேசும் மேற்குலகம் தற்பொழுது ரஸ்ய ஊடகங்களையும், ரஸ்ய சார்பு ஊடகங்களையும் தடை செய்திருப்பது எத்தகைய ஜனநாயக விழுமியங்கள் சார்ந்தது என்பதை யார் கேள்வி கேட்பது? உண்மையிலே போரில் வென்று கொண்டிருப்பவர்கள் எதற்காக எதிரிகளின் ஊடகங்களைத் தடை செய்ய வேண்டும்?

இவை தவிர்த்து, உக்ரைன் நாட்டுக்கு மேலை நாடுகள் போர் ஆயுதங்களை வகைதொகையின்றி வாரி வழங்கிக் கொண்டிருக்கின்றன. போரில் உக்ரைன் வெற்றிபெறும் என்ற நம்பிக்கை மேலை நாடுகளிடம் இல்லாத போதிலும், இத்தகைய ஆயுதங்களின் எதிர்காலம் என்னவாகுமோ என்ற கவலை சிறிதும் இல்லாமலேயே அவற்றை வழங்கி வருகின்றன. ‘தனக்குக் கண் போனாலும் பரவாயில்லை. எதிரிக்குச் சகுனப் பிழையாக இருந்தால் போதும்’ என்கின்ற பாங்கில் எதைப் பற்றியும் கவலை இல்லாமல் மேற்குலகம் செயற்பட்டு வருகின்றதைப் பார்க்க முடிகின்றது.

மொத்தத்தில், ஆப்கானிஸ்தானில் தான் சந்தித்த அவலம் போன்ற ஒன்றை ரஸ்யாவுக்கு உக்ரைன் மண்ணில் பரிசளிக்க அமெரிக்காவும், நேட்டோ நாடுகளும் முயற்சித்து வருகின்றன. அது வெற்றியளிக்குமா அல்லது மேற்குலகின் இந்த வியூகத்தை ரஸ்யா முறியடிக்குமா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

ஆனால், ஒரு யுத்தத்தை – பொதுமக்கள் பாதிப்பைக் குறைத்து – எவ்வாறு முன்னெடுக்க வேண்டும் என்கின்ற பாடத்தை ரஸ்யா உலகிற்குப் போதித்து வருவதைப் பார்க்க முடிகின்றது.

தனது இலக்கு எதுவோ அதனை ஆயுதங்கள் கொண்டு மாத்திரமன்றி, பேச்சுக்கள் மூலம் எட்டுவதற்கான கதவுகளையும் திறந்து வைத்துக் கொண்டே போரில் ஈடுபட்டு வருகின்றது ரஸ்யா. எனினும், இதனைப் புரிந்துகொள்ளும் ஆற்றல் மேற்குலகிடம் இல்லை என்பதே கவலைக்குரிய விடயம்.

Leave A Reply

Your email address will not be published.