நூலகங்களில் வாசகர்கள் வரவேற்பைப் பெறாத பருவ இதழ்களை நிறுத்த முடிவு
பொது நூலகத் துறையின் கீழ் இயங்கி வரும் மாவட்ட மைய நூலகங்கள் மற்றும் கிளை நூலகங்களில் நாளிதழ்கள் மற்றும் பருவ இதழ்கள் இடம் பெறுவதற்காக அங்கீகரிக்கப்பட்ட 514 தமிழ் பருவ இதழ்கள் மற்றும் 178 ஆங்கில பருவ இதழ்கள் இடம் பெற்றுள்ளன. இவற்றில் பெரும்பாலான நூல்கள் நிறுத்தம் செய்யப்படும் என பொதுநூலக இயக்ககம் தெரிவித்துள்ளது.
வாசகர்களால் அதிகம் பயன்படுத்தப்படாத இதழ்கள் நிறுத்தம் செய்யப்படவுள்ளன. எனவே வாசகர்கள் மாணவர்கள் போட்டித் தேர்வுக்குத் தயாராகும் இளைஞர்கள் ஆகியோரின் தேவையின் அடிப்படையில் பருவ இதழ்கள் மற்றும் நாளிதழ்களை மறுசீரமைப்பு செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள 10 துறைசார் நிபுணர்கள் அடங்கிய தேர்வு குழு இன்று ஆலோசனை நடத்தியது. அந்தக் கூட்டத்தில் இதழ்கள் தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் விவாதிக்கப்பட்டன.
இந்தியாவில் வெளியாகும் அனைத்து இதழ்கள் மற்றும் நூல்கள் பொது நூலகங்களுக்கு நூல்கள் மற்றும் நாளிதழ்கள் அனுப்புகைச் சட்டம் 1954-ன் படி, கன்னிமாரா பொது நூலகம் உள்ளிட்ட 4 வைப்பக நூலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும். எனவே, கன்னிமாரா நூலகத்துக்கு அனுப்பிவைக்கப்படும் இதழ்களிலிருந்து பொது நூலகங்களுக்கு இதழ்கள் தேர்வு செய்யப்படும் என்று குழுக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இந்தச் சட்ட நடைமுறையின்படி இதழ்களை வைப்பக நூலகத்துக்கு அனுப்பாத இதழ்கள் உடனடியாக மூன்று இதழ் பிரதிகளை கன்னிமாரா பொது நூலகத்துக்கு அனுப்பிவைக்கவேண்டும் என்று கோரப்படுகிறது. மார்ச் 12-ம் தேதி வரை கன்னிமாரா நூலகத்தில் பெறப்படும் இதழ்கள் தேர்வுக்குழுவின் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று பொது நூலக இயக்குநர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.