கோவையில் திமுக, அதிமுக கவுன்சிலர்கள் ரகளை.. 15 பேர் மீது 4 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு
கோவை மாவட்டம் வெள்ளலூர் பேரூராட்சி தலைவர் மற்றும் துணை தலைவருக்கான மறைமுக தேர்தல் கடந்த 4ஆம் தேதி நடைபெற்றது. காலையில் நடந்த பேரூராட்சி தலைவர் தேர்தலின் போது திமுக, அதிமுக கவுன்சிலர்கள் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இரு தரப்பாக மோதிக்கொள்ளும் பதட்டமான சூழல் ஏற்பட்டது. இதனையடுத்து காலை நடைபெற இருந்த பேரூராட்சி தலைவர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
அன்றைய தினமே பிற்பகலில் வெள்ளலூர் பேரூராட்சி துணைத் தலைவர் தேர்தல் நடைபெற்றது. அப்போதும் திமுக அதிமுக கவுன்சிலர்கள் இடையே தகராறு ஏற்பட்டது. அடுத்தடுத்து இரண்டு முறை தேர்தல் அலுவலகத்தில் இருந்து வாக்குப் பெட்டியினை சாலையில் தூக்கி வீசினர்.மேலும் வாக்குச் சீட்டுகளும் கிழித்து எறியப்பட்டது. இதனையடுத்து பிற்பகலில் நடைபெற இருந்த பேரூராட்சி துணைத் தலைவர் தேர்தலும் ஒத்திவைக்கப்பட்டது.
வெள்ளலூர் பேரூராட்சியில் 15 வார்டுகளில் 8 வார்டுகளில் அதிமுகவும், 6 வார்டுகளில் திமுகவும், ஒரு வார்டில் சுயேட்சையும் வெற்றி பெற்று இருந்தனர். இந்நிலையில், திமுக அதிமுக கவுன்சிலர்களும், சுயேட்சை கவுன்சிலரும் இணைந்து தேர்தலை நடத்தவிடாமல் இடையூறு செய்தது குறித்து போத்தனூர் காவல் நிலையத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி பாலசுப்பிரமணி புகார் அளித்தார்.
இதன், அடிப்படையில் திமுக, அதிமுக, சுயேட்சை கவுன்சிலர்கள் 15 பேர் மீது நான்கு பிரிவின் கீழ் போத்தனூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அனுமதி இன்றி ஒன்று கூடுதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தல், பொது செத்துக்கு சேதம் விளைவித்தல் ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.