29 அமைச்சர்கள், 40 இராஜாங்க – பிரதி அமைச்சர்கள் : புதிய அமைச்சரவை புதன் பதவியேற்கும்
ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி அரசின் புதிய அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வு நாளைமறுதினம் புதன்கிழமை கண்டியில் நடைபெறவுள்ளது.
29 அமைச்சர்களும். 40 அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர்களும் பதவியேற்கவுள்ளனர்.
19ஆவது அரசமைப்பு திருத்தத்துக்கு அமைவாக அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களின் எண்ணிக்கை 29 ஆகவும், அமைச்சரவை அந்தஸ்தற்ற இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்களின் எண்ணிக்கை 40ஆகவும் வரையறுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய பிரதமர் மகிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட 29 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்கவுள்ளனர்.
இதன்போது நிதி மற்றும் வீடமைப்பு அமைச்சு பதவி பிரதமருக்கு வழங்கப்படவுள்ளது என அரச தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் பாதுகாப்பு அமைச்சு பதவி ஜனாதிபதியின் கண்கானிப்பின் கீழ் இருக்கும் வகையில் கடந்த முறையைப் போன்று எவருக்கும் வழங்காது இருக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது எனவும் தெரியவருகின்றது.
அத்துடன் தேர்தலுக்கு முன்னரான இடைக்கால அரசில் அமைச்சுப் பதவிகளை வகித்த 16 பேரில் சிலருக்கு அதே அமைச்சுப் பதவியை வழங்கவும், மற்றையவர்களின் அமைச்சுப் பதவிகளில் மாற்றம் மேற்கொள்ளவும் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட இளம் எம்.பிக்கள் சிலருக்கும் மற்றும் தேசியப்பட்டில் மூலம் தெரிவாகியுள்ளவர்களில் சிலருக்கும் அமைச்சு பதவிகள் வழங்கப்படவுள்ளன எனவும் தெரியவருகின்றது.
பிந்திய இணைப்பு :
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் 28 அமைச்சுக்கள் மற்றும் 40 இராஜாங்க அமைச்சுக்களைக் கொண்ட அமைச்சு கட்டமைப்பு அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் ஜனாதிபதி மற்றும் பிரதமரினால் வழிநடத்தப்படும் அமைச்சுக்களும் உள்ளடங்கும் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அமைச்சுக்கள், அமைச்சுக்களுக்குரிய விடயங்கள்,சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் மற்றும் நியதிச் சட்டநிறுவனங்கள், நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய சட்டங்கள்பற்றிய வர்த்தமானி அறிவித்தல் இன்று மாலை வெளியிடப்படும் எனவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவையை அமைக்கும்போது தேசிய முன்னுரிமை, கொள்கைப் பொறுப்புகள் மற்றும் பணிகள் கருத்தில்கொள்ளப்பட்டுள்ளன. ஒவ்வொரு அமைச்சுக்கும் உரிய விரிவான பணிகளுக்கேற்ப முன்னுரிமையை வழங்குதல் மற்றும் குறித்த நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதை இலகுபடுத்தும் வகையில் இராஜாங்க அமைச்சுக்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
அமைச்சுக் கட்டமைப்பை வகுக்கும்போது தேசிய பாதுகாப்பு, பொருளாதார அபிவிருத்தி, உட்கட்டமைப்பு வசதிகள், கல்வி, சுகாதாரம், விளையாட்டு ஆகிய துறைகளுக்கு விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இக்கட்டமைப்பின் மூலம் கிராமிய, விவசாய அபிவிருத்தி மற்றும் கல்வித்துறையின் பல்வேறு துறைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு அமைச்சுக்குமான விடயங்கள், முன்னுரிமைகள், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மற்றும் சட்ட அமைப்பு பற்றி உப தலைப்பின் கீழ் விளக்கப்பட்டுள்ளது.
அமைச்சுக்களுக்குப் பொறுப்பான அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் எதிர்வரும் 12ஆம் திகதி புதன்கிழமை முற்பகல் வரலாற்று முக்கியத்துவமிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்திலுள்ள மகுல்மடுவ மண்டபத்தில் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொள்ளவுள்ளனர் – என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவின் செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments are closed.