ஜல்லிக்கட்டில் நாட்டு இன மாடுகள் பங்கேற்கும் விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் மேல்முறையீடு

ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ள நாட்டு இன மாடுகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசின் தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள ஒக்கியம் துரைப்பாக்கத்தைச் சேர்ந்தவர் சேஷன். இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், “ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் நாட்டு இன மாடுகளை மட்டும் அனுமதிக்க உத்தரவிட வேண்டும். வெளிநாட்டு, கலப்பின மாடுகள் பங்கேற்கத் தடை விதிக்க வேண்டும். நாட்டு மாடுகளுக்குப் பெரிய திமில் இருப்பதால் அவற்றை ஜல்லிக்கட்டு வீரர்கள் பிடிக்க ஏதுவாக இருக்கும். வெளிநாட்டு, கலப்பின மாடுகளுக்குத் திமில் இருப்பதில்லை’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனுவை கடந்த ஆண்டு செப்டம்பர் 2-ஆம் தேதி விசாரித்த உயர்நீதிமன்ற அமர்வு, “ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் நாட்டு மாடுகள் மட்டுமே பங்கேற்க அனுமதிக்க வேண்டும். வெளிநாட்டு மாடுகள், கலப்பின மாடுகளைப் பங்கேற்க அனுமதிக்கக் கூடாது. ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுகள், நாட்டு மாடுகள் எனக் கால்நடை மருத்துவர்கள் சான்றளிக்க வேண்டும்’ என உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசின் தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்குரைஞர் டி.குமணன் தாக்கல் செய்துள்ள அந்த மனுவில் தெரிவித்திருப்பதாவது:
இந்த விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தவர் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளில் தமிழ்நாட்டு இன மாடுகளை பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்று மட்டுமே கோரியிருந்தார். இதுபோன்ற விளையாட்டுகளில் கலப்பினம், வெளிநாட்டு இனக் காளைகளை பங்கேற்பதைத் தடுக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார். இந்தியா / தமிழ்நாட்டு கால்நடைகளின் இனச்சேர்க்கையில் செயற்கை கருவூட்டல் கடைப்பிடிப்பது குறித்து குறிப்பிடப்படவில்லை. இந்த அம்சம் தொடர்பாக எதிர்மனுதாரர் தரப்பில் வாதமும் முன்வைக்கப்படவில்லை.

இந்த விவகாரத்தில் ஆய்வுகள், ஆவணங்கள், புள்ளிவிவரத் தரவுகள் ஆகியவற்றை உயர்நீதிமன்றம் பரிசீலிக்காமல் செயற்கை கருவூட்டலை முடிந்தவரைத் தவிர்க்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. மேலும், இது விலங்குகளின் இனச்சேர்க்கை உரிமைகளை மறுப்பதாக அமையும் என்றும் தெரிவித்துள்ளது. எதிர்மனுதாரர் எழுப்பிய விவகாரத்தை நீதிமன்றத்தால் முடிவு செய்ய முடியாது. விலங்குகளில் இனச்சேர்க்கையானது இன விருத்திக்காக செய்யப்படுகிறது.

செயற்கை கருவூட்டலானது இனச்சேர்க்கையில் இருந்து காளைகளை தடுப்பதில்லை. ஆனால், காளைகள் பயன்படுத்தப்படுவதை வரையறுக்கிறது. ஆகவே, விலங்குகளின் இனச்சேர்க்கை உரிமைகளை அல்லது இயற்கையான இனச் சேர்க்கையை மறுப்பதாகவோ இல்லை. இந்த நடைமுறையானது எந்த ஒரு விலங்குகளின் உரிமைகளை மீறுவதாக இல்லை. தமிழகத்தில் கால்நடைகளின் வளர்ச்சிக்கு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பால் உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக அரசு இலவச கால்நடை விநியோக திட்டத்தை செயல்படுத்தி உள்ளது. ஆகவே, இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றம் உரிய வகையில் பரிசீலிக்காமல் உத்தரவு பிறப்பித்துள்ளது என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.