ஐ.நா. ஆணையாளர் எம்மை வெருட்ட முடியாது! – கோட்டா அரசு திட்டவட்டம்.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் தனது அதிகார எல்லையை மீறி எம்மை வெருட்ட முடியாது எனக் கோட்டாபய அரசு இடித்துரைத்துள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் 45 நாடுகளுள் 31 நாடுகள் இலங்கையின் நிலைப்பாட்டை ஆதரித்தன என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.

கூட்டு முயற்சியாலேயே இந்த வெற்றி கிடைத்தது என்றும் கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது அவர் கருத்து வெளியிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரில் இரண்டு தடவைகள் உரையாற்றும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. ஐந்து விடயங்களை மையப்படுத்தியதாகவே எனது உரை அமைந்தது.

ஐரோப்பாவில் தற்போது கடும் நெருக்கடி நிலைமை உருவாகியுள்ளது, இந்நிலையில், எதற்கு இலங்கை மீது கூடுதல் கவனம் செலுத்தப்படுகின்றது? இலங்கையை இலக்கு வைத்து ஏன் நிதி ஒதுக்கப்படுகின்றது? வருடாந்தம் அறிக்கைகள் ஏன் முன்வைக்கப்படுகின்றன? என்று நான் கேள்விகளை எழுப்பினேன்.

பிற நாடுகளில் சம்பவங்கள் இடம்பெறவில்லையா? எனவே, ஒவ்வொரு நாடுகள் தொடர்பிலும் அறிக்கைகள் வந்தால் அது எங்கு சென்று நிற்கும்?

இலங்கையின் உள்ளக விவகாரத்தில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை தலையிட்டுள்ள விடயங்கள் தொடர்பிலும் சுட்டிக்காட்டினேன். அது இலங்கையின் அரசமைப்பு மற்றும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் அதிகார எல்லைக்கு முரணான விடயமாகும் என்பதையும் தெளிவுபடுத்தினேன்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.