ஐ.தே.க. தேசியப் பட்டியல் ருவன் விஜேவர்தனவுக்கு?
ஐக்கிய தேசிய கட்சிக்கு கிடைக்கப்பெற்றுள்ள தேசியப் பட்டியல் ஆசனம் யாருக்கு வழங்கப்படும் என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்துள்ள நிலையில் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட சிரேஷ்ட உறுப்பினர்கள் கூடி ருவன் விஜேவர்தனவுக்கு வழங்குவதற்குத் தீர்மானித்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி பாரிய பின்னடைவைச் சந்தித்திருக்கின்றது. ஆசனம் எதையும் பெறவில்லை.
நாடளாவிய ரீதியில் 2 இலட்சத்து 49 ஆயிரத்து 435 வாக்குகளை மாத்திரமே ஐக்கிய தேசியக் கட்சியால் பெற்றுக்கொள்ள முடிந்தது. மொத்தமாகப் பெற்றுக் கொண்ட வாக்குகளின் அடிப்படையில் தேசியப் பட்டியல் மூலமான ஆசனம் ஐ.தே.க.வுக்கு கிடைக்கப் பெற்றுள்ளது.
இந்தநிலையில், ஐக்கிய தேசியக் கட்சிக்குக் கிடைக்கப் பெற்றுள்ள தேசியப் பட்டியல் மூலமான ஓர் ஆசனத்தை ருவன் விஜேவர்தனவுக்கு வழங்குவதற்குக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட சிரேஷ்ட உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர் எனவும், இது குறித்த இறுதித் தீர்மானம் விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கட்சியின் முக்கிய பதவிகளில் ஏற்படுத்தப்படவிருக்கும் மாற்றங்கள் மற்றும் கட்சியின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன எனவும், இது தொடர்பில் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் கட்சியின் உப தலைவர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
Comments are closed.