அனைத்து கட்சிகளையும் இணைத்து தேசிய அரசாங்கம் ஒன்றை அமைக்க முயற்சி!
தற்போதைய நெருக்கடியை அடுத்து அனைத்து அரசாங்க மற்றும் எதிர்க்கட்சியின் அரசியல் கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கான கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக அரசாங்க உள்ளக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
காபந்து அரசாங்கத்தை அமைப்பதற்கான அடிப்படைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. எதிர்வரும் மார்ச் 23ஆம் தேதி நடைபெறவுள்ள சர்வகட்சி மாநாட்டில் முன்வைக்கப்படும் முன்மொழிவுகளையும் பரிசீலிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுக்கும் வகையில் தற்போதைய அரசாங்கம் பொதுவான நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாகவும், தேசிய அரசாங்கம் ஒன்றை அமைப்பது தொடர்பில் சர்வதேச ரீதியாக சில ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
இந்த மாதிரியான ஆட்சி முறை தொடர்பில் அரசாங்கத்தின் உயர் மட்டத்தினரிடையே ஒருமித்த கருத்து எட்டப்பட்டுள்ள போதிலும், அரசாங்கத்திலுள்ள சில அமைச்சர்கள் மற்றும் பின்வரிசை உறுப்பினர்கள் இவ்விடயத்தில் மாறுபட்ட கருத்தைக் கொண்டிருப்பதாக அறியமுடிகிறது.
எவ்வாறாயினும், அவ்வாறானதொரு தேசிய அரசாங்கத்தை அமைப்பது மற்றும் அதன் பிரதமராக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை நியமிப்பது தொடர்பாக வெளிவந்த செய்திகளில் உண்மை இல்லை எனவும் அப்படியான பேச்சு வார்த்தைகளில் தான் கலந்து கொள்ளவில்லை எனவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அரசாங்கத்தின் பலம் வாய்ந்த அமைச்சர் ஒருவரும் இவ்விடயம் தொடர்பில் கேட்ட போது கருத்து எதையும் தெரிவிக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் வினவிய போது ,
ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து யாரும் அரசியல் ரீதியாக தற்கொலை செய்து கொள்ள விரும்பவில்லை. எனவே, அவ்வாறானதொரு தேசிய அரசாங்கத்திற்கு எம் தரப்பிலிருந்து எவரும் செல்லமாட்டோம் என உறுதியளிக்க முடியும். மேலும் இதன் பின்னணியில் இந்தியா உள்ளது என்பது கட்டுக்கதையாக இருந்திருக்க வேண்டும். இந்தியா என்னுடன் தொடர்ந்து நட்புள்ள நாடு. அவர்கள் இதைச் செய்ய மாட்டார்கள் என்பதையும் என்னால் உறுதியளிக்க முடியும் என்றார்.