வாகரை பிரதேச கலாசார மத்திய நிலையம் திறந்துவைப்பு!!
வாகரை பிரதேச கலாசார மத்திய நிலையம் (11) திகதி வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டுள்ளது.
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அதிமேதகு ஜனாதிபதியின் “நாட்டை கட்டியெழுப்புவதற்கான சுபீட்சத்தின் நோக்கு” அபிவிருத்தித் திட்டங்களை யதார்த்தமாக்கும் பொருட்டு பொது நிதியின் மூலம் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சினால் நிர்மானிக்கப்பட்ட வாகரை கலாசார மத்திய நிலையத்தை தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள் மற்றும் மேம்பாட்டு அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரம நாயக்க அவர்களின் பங்குபற்றுதலுடன் பிரதேச கலைஞர்களிடம் இன்று கையளிக்கப்பட்டுள்ளது.
வாகரை பிரதேச செயலாளர் எந்திரி ஜீ.அருணன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் பழங்குடி சமூகத்தின் தலைவர்கள், பிரதேச கலைஞர்கள், புத்தசாசன கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் கலாநிதி பிரசாத் ரணசிங்க, மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த், உதவி மாவட்ட செயலாளர் ஏ.நவேஸ்வரன், வாகரை பிரதேச சபையின் தலைவர், மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் எஸ்.ஜெய்னுலாப்தீன், கலாசார மத்திய நிலையங்களின் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் இதன்போது கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தனர்.
மங்கள வாத்தியம் முழங்க பழங்குடியினர் மற்றும் பிரதேச கலைஞர்களால் வரவேற்பளிக்கப்பட்டதனைத் தொடர்ந்து கொடி ஏற்றப்பட்டு மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமாகிய நிகழ்வில் ஆசியுரை மற்றும் தலைமையுரை என்பன இடம்பெற்றதனைத் தொடர்ந்து பிரதம அதிதியினால் சர்வமத தலைவர்களுக்கு கௌரவமளிக்கப்பட்டது. இதன்போது மண்முனை வடக்கு கலாசார மத்திய நிலையத்தின் மாணவர்களால் கண்கவர் கலைநிகழ்வுகளும் அரங்கேற்றப்பட்டது.
அத்தோடு அமைச்சரினால் கலாசார மத்திய நிலையத்திற்கான இசை கருவிகள் மற்றும் நூல்கள் என்பன வழங்கி வைக்கப்பட்டதுடன், நிகழ்வின் நினைவாக குறித்த வளாகத்தில் பயன்தரும் மரக்கன்றொன்று அமைச்சரினால் நாட்டிவைத்தமையும் குறிப்பிடத்தக்கது.