தமிழரசின் தலைமை சிறிதரனுக்கு வழங்கினால் ஆதரவு வழங்குவேன் : சுமந்திரன்

மாவையைக் கடுமையாக எச்சரித்த சுமந்திரன்
உள்வீட்டு விவகாரங்களையும் போட்டுடைத்தார்

“இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் பதவியை சிவஞானம் சிறிதரனுக்குக் கொடுத்தால் அதை நான் ஆதரிப்பேன்.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

“பொதுத்தேர்தல் காலத்தில் தமிழரசுக் கட்சியின் பொருளாளர் கனகசபாவதி குலநாயகமும் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவின் மகன் கலையமுதனும் யாழ்ப்பாணத்தில் வீடு வீடாகச் சென்று எனக்கெதிராகப் பரப்புரை செய்தார்கள்” எனவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

ஆஸ்திரேலிய, எஸ்.பி.எஸ். தமிழ் செய்திப் பிரிவுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அந்தச் செவ்வியில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“கட்சிக்கு எதிராக எப்போதும் நடந்துகொள்பவன் நான் இல்லை. சக வேட்பாளர்கள் எனக்கு எதிராகப் பரப்புரைகள் செய்தனர். ஆனால், நான் ஒருபோதும் அவர்கள் போன்று சக வேட்பாளர்களைத் தாக்கவில்லை.

எனக்கு ஆதரவாகப் பேசியவர் சிறிதரன் மாத்திரமே. இதனால் கடைசியில் அவருக்கு எதிராகவும் பரப்புரை செய்தார்கள். ஆனால், இறுதியில் நானும் சிறிதரனும்தான் வென்றோம். எமக்கெதிராகச் சதி செய்தவர்கள் தோற்றுவிட்டார்கள்.

சுமந்திரனைத் தோற்கடிப்போம் எனச் சக வேட்பாளரின் பத்திரிகையில் தலைப்புச் செய்தியாக வந்தபோது கூட, நான் பத்திரிகையை விநியோகித்தேனே தவிர, அது குறித்து பகிரங்கமாக எதையும் பேசவில்லை. இது குறித்து கட்சியின் தலைவரிடம் கூறினேன். ஆனால், அவர் எதையும் கூறவில்லை.

எனக்கெதிராக கட்சியின் பொருளாளரும் யாழ். மாவட்டக் கிளைத் தலைவருமான கனகசபாவதி குலநாயகம் மற்றும் கட்சியின் தலைவரின் மகன் கலையமுதன் ஆகியோர் வீடு வீடாகச் சென்று பரப்புரை செய்தார்கள். எனக்கு வாக்களிக்க வேண்டாம் எனவும் அவர்கள் கோரினார்கள்.

இது குறித்து நான் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவிடம் பல தடவைகள் கூறியிருந்தேன். நான் இதைத் தேர்தல் முடியும் வரை பகிரங்கமாகக் கூறவில்லை. அதை அப்போது கூறியிருந்தால் நான் தலைவருக்கு எதிராகச் சதி செய்கின்றேன் என்று கூறியிருப்பார்கள். இனி நான் அதைக் கூறுவேன். அதற்கான ஆதராங்களும் என்னிடம் உள்ளன.

தேர்தல் முடிந்த பின்னர் நானும் சிறிதரனும் தலைவரிடம் போய், “நீங்களும் சேர்ந்து கட்சிக்குள்ளேயே பாரிய சதி செய்தீர்கள். அதனால்தான் சதிகாரர்கள் எல்லோரும் தோற்றிருக்கிறீர்கள். நாங்கள் இருவரும்தான் வென்றிருக்கின்றோம். அதை ஞாபகத்தில் வைத்திருங்கள்” என்று சொல்லிவிட்டு வந்துள்ளோம்.

இதேவேளை, சரவணபவனுக்கு வேட்பாளருக்கான இடம் கொடுக்கவேண்டாம் என்று நான்தான் கூறினேன். அதற்கான காரணங்களையும் கூறினேன். எவரும் நான் கூறியவை தவறென்று கூறவில்லை.

எனினும், பின்னர் அவர் இனிமேல் அவ்வாறு நடக்கமாட்டார் எனக் கூறி அவருக்கு எனது எதிர்ப்புக்கு மத்தியில் இடம்கொடுக்கப்பட்டது.

மக்கள் தீர்ப்பின்படி சிறிதரனும் நானும் வென்றிருக்காவிட்டால், கட்சி இன்னும் அவமானமான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும். ஓர் ஆசனத்தைப் பெற வேண்டிய நிலைக்கும் தள்ளப்பட்டிருக்கும்.

அதேவேளை, சிறிதரன் கட்சி மறுசீரமைக்கப்படும்போது அனைவரும் விரும்பித் தலைவர் பதவியைத் தமக்குத் தந்தால் ஏற்றுக்கொள்வேன் என்று கூறியுள்ளார். ஆனால், தனக்கு அந்தப் பதவியைத் தரும்படி அவர் கோரவில்லை.

அப்படி சிறிதரனுக்குத் தலைமைப் பதவி கொடுக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டால் அதற்கு நான் ஆதரவு வழங்குவேன்.

தேசியப் பட்டியல் அறிவிப்பு முடிவு செய்யப்பட்டுவிட்டது. அதில் இழுபறி எதுவும் இல்லை. அப்படியான செய்திகள் உண்மையானவை அல்ல” – என்றார்.

Comments are closed.