பகலிரவு டெஸ்ட்: முதல் இன்னிங்சில் இலங்கை அணி தடுமாற்றம்.
இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையேனான இரண்டாவது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் பகலிரவு போட்டியாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் சர்மாவும், மயங்க் அகர்வாலும் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே மயங்க் அகர்வால்(4) மற்றும் ரோகித் சர்மா(15) இருவரும் வெளியேறினர். இதையடுத்து ஹனுமா விகாரியும் விராட் கோலியும் இணைந்து சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். எனினும் இந்த கூட்டணியை இலங்கை பந்துவீச்சாளர்கள் தகர்த்தனர். ஹனுமா விகாரி 31 ரன்கள் எடுத்த நிலையில், ஜெயவிக்ரமா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
தொடர் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் விளையாடிவந்த விராட் கோலியும் நீண்டநேரம் நிலைக்கவில்லை. அவர் 23 ரன்களில் தனஞ்ஜெயா டி சில்வா பந்துவீச்சில் எல்.பி.டபில்யூ முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்துவந்த பேட்ஸ்மேன்களில் ஸ்ரேயஸ் அய்யரை தவிர மற்ற பேட்மேன்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். தனி ஆளாக போராடிய ஸ்ரேயஸ் அய்யர் 92 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் இந்திய அணி 59.1 ஓவர்களில் 252 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது. இலங்கை அணியில் ஜெயவிக்ரமா அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதையடுத்து களமிறங்கிய இலங்கை அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய கேப்டன் கரணரத்னே(4), குசல் முண்டிஸ்(2) வந்த வேகத்தில் வெளியேறினர். அந்த அணியின் அனுபவ வீரரான ஆஞ்சலோ மேத்தீவ்ஸ் ஓரளவு தாக்குபிடித்தார். அவர் 43 ரன்கள் எடுத்து பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து தங்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
முதல்நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 30 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 86 ரன்கள் எடுத்துள்ளது. இலங்கை அணி இந்தியாவை விட 166 ரன்கள் பின்தங்கியுள்ளது. டிக்வெல்லா 13 ரன்களுடனும், எம்புல்தெனியா ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர். நாளை இரண்டாம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது.