வகுப்பறைகளில் ஹிஜாப் தடை செல்லும்: கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு
ஹிஜாப் சர்ச்சை தொடர்பான வழக்கை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம், வகுப்பறைகளில் ஹிஜாப் அணிய தடை விதித்து மாநில அரசு பிறப்பித்திருந்த சீருடை உத்தரவு செல்லும் என செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.
ஹிஜாப் அணிவது இஸ்லாமிய மத வழக்கம் அல்ல என்றும் உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
கர்நாடகத்தில் கல்வி நிலையங்களுக்கு ஹிஜாப் அணிந்து வருவது தொடர்பாக எழுந்த சர்ச்சையை தொடர்ந்து, பள்ளிகள், கல்லூரிகளுக்கு சீருடையில் மட்டுமே வர அறிவுறுத்தி பிப். 5-ஆம் தேதி கர்நாடக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து உடுப்பி அரசு மகளிர் பி.யூ. கல்லூரி முஸ்லிம் மாணவிகள் உள்ளிட்ட பலரும் தாக்கல் செய்திருந்த 7 மனுக்களை கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ரித்துராஜ் அவஸ்தி தலைமையிலான நீதிபதிகள் கிருஷ்ணா எஸ்.தீக்ஷித், காஸி ஜெய்புனிசா மொஹியுத்தீன் ஆகியோர் கொண்ட அமர்வு, பிப். 10-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. 25-ஆம் தேதி வரையில் 11 நாள்களாக இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பை செவ்வாய்க்கிழமை வெளியிட்டனர்.
ஹிஜாப் அணிவது இஸ்லாமிய மத வழக்கப்படி அத்தியாவசியமானது அல்ல. எனவே, அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 25-இன்படி மத உரிமைகள் ஹிஜாபுக்கு பொருந்தாது. பள்ளிகள், கல்லூரிகளில் கடைப்பிடிக்க மாநில அரசு பிப். 5-ஆம் தேதி பிறப்பித்திருந்த சீருடை உத்தரவு அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது அல்ல.
சீருடை அணியும்படி அறிவுறுத்துவது, அரசியலமைப்புச் சட்டம் 19(1) (ஏ)-இன்படி பேச்சுரிமை மற்றும் பிரிவு 21-இன்படி அந்தரங்க உரிமைக்கு எதிரானது அல்ல. சீருடை அணிவது காரணத்துடன்கூடிய கட்டுப்பாடாகும். இதை அரசியலமைப்புச் சட்டம் அனுமதிக்கிறது. எனவே, சீருடை அணிவதற்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவிக்க இயலாது.
என்ன அணிய வேண்டும் என்பது ஒருவரின் தனியுரிமை என்பதையும், ஒருவரின் உடை அவரது வெளிப்பாடாகும் என்று மனுதாரர்கள் கூறுவதை நாங்கள் மறுக்கவில்லை. ஆனால், அவை அனைத்தும் நியாயமான கட்டுப்பாடுகளுக்கு உள்பட்டதாகும்.
இஸ்லாமிய மத வழக்கப்படி, ஹிஜாப் அணிவது கட்டாயம் அல்ல என்பதை உறுதி செய்யவும், ஹிஜாப் அணிவது ஆரம்பத்தில் இருந்தே கடைப்பிடிக்கப்படும் வழக்கம் என்று கூறுவதற்கு எவ்வித அறுதியிட்ட ஆதாரங்களும் அளிக்கப்படவில்லை. ஹிஜாப் ஓர் ஆடை என்பதால், அது இஸ்லாமிய மத நம்பிக்கையின் அடிப்படை என்பதை ஏற்க முடியாது.
ஹிஜாப் அணிவதைக் கடைப்பிடிக்காதவர்கள் பாவம் செய்தவர்கள் என்றோ, அதனால் இஸ்லாம் மதம் தனது பெருமையை இழந்துவிடும் என்றோ, அது மதமாக இருக்காது என்றோ கூறுவதை ஏற்க முடியாது. ஹிஜாப் அணிவது இஸ்லாமிய மத வழக்கப்படி மீறக் கூடாத மத வழக்கம் என்று கூறுவதை உறுதிப்படுத்த எந்த ஆதாரத்தையும் அளிக்க மனுதாரர்கள் தவறிவிட்டனர்.
நாகரிக சமுதாயங்களில், கல்வியை போதிப்பவர்கள், பெற்றோருக்கு அடுத்தபடியாக மதிக்கப்பட வேண்டியவர்கள். ஆசிரியர்கள் காட்டும் வழிகாட்டுதலின் கட்டுப்பாட்டில் இருக்கக் கூடியவர்கள் மாணவர்கள். குழந்தைகளைப் பள்ளிகளில் சேர்க்கும்போது, குழந்தைகள் மீதான தங்கள் அதிகாரத்தை பெற்றோர்கள் ஆசிரியர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்கள். அப்படியானால், மாணவர்கள் மீது ஆசிரியர்கள் செலுத்தும் அதிகாரம், பெற்றோர்களுடன் பகிர்ந்து கொள்ளும் அதிகாரமாகும்.
எனவே, சீருடை மாணவர்களின் அடிப்படை உரிமையை அல்லது தனியுரிமையை கேள்விக்கு உள்ளாக்குவதாகும் என்பது கற்பனைக்கு எட்டாததாகும். இது போன்றவை அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 14 (சமத்துவம்), சட்டப்பிரிவு 15 (மதரீதியான பாகுபாடு கூடாது) ஆகியவற்றுக்கு எதிரானது அல்ல. மதம், மொழி, பாலினம் அல்லது வேறு எந்தக் கூறுகளுக்கும் அப்பாற்பட்டு அனைத்து மாணவர்களுக்கும் சமமானது சீருடை. மாணவர்களை சீருடை பாகுபடுத்துகிறது என்பது ஏற்கத்தக்கதல்ல.
ஹிஜாப், காவித் துண்டு அல்லது வேறு எந்த மத அடையாளத்தையும் பள்ளிச் சீருடையில் இருந்து விலக்கி வைப்பது சுதந்திரத்தை நோக்கிய நடவடிக்கையாகும். குறிப்பாக, கல்வியைப் பெறுவதற்கான வழிவகையாகும். ஹிஜாப் அல்லது வேறு மத அடையாளங்களை அணியக் கூடாது என்பது பெண்களின் தனியுரிமை அல்லது கல்வி உரிமையைப் பறிப்பதாகாது. வகுப்பறைகளுக்கு வெளியே அவற்றை அணிய எவ்வித தடையும் இல்லை.
சீருடை இல்லாமல் யாரும் பள்ளியைக் கற்பனை செய்து பார்க்க முடியாது. சீருடை என்பது புதிதல்ல. அது முகலாயர்களோ ஆங்கிலேயர்களோ அறிமுகம் செய்ததல்ல. அது பண்டைய குருகுல காலத்திலிருந்தே நடைமுறையில் உள்ளது என்று மூன்று நீதிபதிகளும் ஒரு மனதாக ஏற்றுக்கொண்ட தீர்ப்பில் கூட்டாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹிஜாப் தொடர்பாக சென்னை மற்றும் கேரள உயர்நீதிமன்றங்கள் அளித்துள்ள தீர்ப்புக்கும் இந்த வழக்குக்கும் சம்பந்தமில்லை என்று கூறிய உயர்நீதிமன்றம், 129 பக்கங்கள் கொண்ட தனது தீர்ப்பில் பல்வேறு உயர்நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புகளை மேற்கோள் காட்டியுள்ளது.
உடுப்பி பி.யூ. மகளிர் கல்லூரி இஸ்லாமிய மாணவிகள் தொடர்ந்திருந்த மனுக்களைத் தள்ளுபடி செய்த கர்நாடக உயர்நீதிமன்றம், சீருடை தொடர்பாக கர்நாடக அரசு பிறப்பித்திருந்த உத்தரவை ஏற்றுக் கொண்டுள்ளது.
மேலும், ஹிஜாப் தொடர்பாக உடுப்பியில் நடந்த விவகாரங்களில் அடிப்படைவாத இஸ்லாமிய அமைப்புகளின் பங்கை ஆராய்வதற்கு, தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அல்லது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய பொதுநல மனுவையும் கர்நாடக உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தீர்ப்பை ஏற்க முதல்வர் வேண்டுகோள்
கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்து, அந்தத் தீர்ப்பை அமல்படுத்த மாநில அரசுடன் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று முதல்வர் பசவராஜ் பொம்மை கேட்டுக் கொண்டுள்ளார்.
உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு
வகுப்பறைக்குள் ஹிஜாப் அணியத் தடை விதித்த கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யாத நிபா நாஸ் என்ற மாணவி சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பள்ளிகளில் சீருடை கட்டாயம் என கர்நாடக மாநில கல்விச் சட்டத்தில் குறிப்பிடப்படவில்லை என்ற உண்மையை உயர்நீதிமன்றம் கருத்தில் கொள்ளத் தவறிவிட்டதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மத சுதந்திரத்துக்கு உயர்நீதிமன்றம் தவறான விளக்கமளித்துள்ளதாகவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.