விலை போகாத சின்ன வெங்காயத்தால் விவசாயிகள் வேதனை
தமிழகத்திலேயே அதிக அளவில் சின்ன வெங்காய சாகுபடியில் ஈடுபட்டு வரும் பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள், விளைச்சல் அதிகரித்தும் நல்ல விலை கிடைக்காததால் மாற்று பயிர் சாகுபடி செய்வதோடு, சின்ன வெங்காயத்திற்கு உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
தமிழகத்திலேயே அதிக அளவில் சின்ன வெங்காய சாகுபடியில் பெரம்பலூர் மாவட்ட விவசாயிகளுக்கு ஈடுபட்டு வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் 12,500 ஏக்கர் நிலப்பரப்பில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 4 அல்லது 3 பட்டங்களில், மாவட்டத்தில் நாட்டார்மங்கலம், பாடாலூர், செட்டிகுளம், சத்திரமனை, இரூர் மற்றும் எசனை உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட கிராமங்களில் அதிகளவில் சாகுபடி சின்ன வெங்காயம் செய்யப்படுகிறது. இதனால் தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகளின் சின்னவெங்காய தேவையை பெருமளவு பூர்த்தி செய்யும் மாவட்டமாக பெரம்பலூர் மாவட்டம் திகழ்ந்து வருகிறது.
இந்நிலையில் ஆண்டுதோறும் சின்ன வெங்காய சாகுபடி செய்யும் விவசாயிகள் வறட்சி, நோய் தாக்குதல், இடைத்தரகர்களின் ஆதிக்கம், விதை வெங்காய விலையேற்றம், ஆட்கள் பற்றாக்குறை, உரம் போன்ற மற்றும் விலையின்மை போன்ற பல்வேறு பிரச்சனைகளால் நஷ்டத்தை சந்திப்பது வழக்கமாகி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு ஓரளவிற்கு மழை பெய்ததால், சின்ன வெங்காய சாகுபடியில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு நல்ல மகசூல் கிடைத்தது. இதனால், நல்ல வருமானம் கிடைக்கும் என்ற மகிழ்ச்சயில் இருந்த விவசாயிகளுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. காரணம் நல்லவிளைச்சல் ஏற்பட்டு அதிக அளவில் மகசூல் கிடைத்துள்ள நிலையில் வெங்காயமும் நன்கு வளர்ந்து, திரட்சியாக உள்ளது. ஆனால் இந்த வெங்காயத்தை வாங்குவதற்கு ஆள் இல்லாமல் அடிமாட்டு விலைக்கு விற்பனை செய்யும் நிலையில் பெரம்பலூர் மாவட்ட சின்ன வெங்காய விவசாயிகள் உள்ளனர்.
கொரோனா தொற்று காரணமாக சின்ன வெங்காயம் ஏற்றுமதி செய்வதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளதால், சின்னவெங்காயம் அதிக அளவில் தேக்கமடை ந்துள்ளதோடு, கடந்த ஆண்டு ரூ.100க்கு விற்பனை செய்யப்பட்ட சின்ன வெங்காயம் தற்போது ரூ.10க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் இந்த பிரச்சனையில் இருந்து விடுபட வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறும் ஆலோசனைப்படி மாற்று பயிர் சாகுபடியில் ஈடுபட்டு வருகிறோம். அந்த வகையில் சின்னவெங்காயத்தை தவிர்த்து, மக்காச்சோளம், மரவள்ளி, கருணைகிழங்கு, வேர்க்கடலை மற்றும் நெல் போன்ற மாற்று பயிர் சாகுபடி செய்தால், குரங்கு, மான், மயில் மற்றும் காட்டுப்பன்றி போன்ற வனவிலங்குகள் சேதப்படுத்தி விடுகின்றன.
உரலுக்கு ஒரு பக்கம் அடி, மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் அடி என்பது போல இப்போது அவஸ்த்தை பட்டு வருகிறோம். இது மட்டுமின்றி கடந்த ஆண்டை விட உரம், ஆட்கள் கூலி இரு மடங்கு உயர் ந்து விட்டது. ஆனால் கடந்த ஆண்டை விட வெங்காயத்தின் விலை 10 மடங்கு குறைந்து போனது. இதனால் சின்ன வெங்காயம் சாகுபடி செய்வதை விட்டு கூலி வேலைக்கு செல்லும் முடிவுக்கு வந்துள்ளதாக வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர். மாற்றுப்பயிரும் செய்யமுடியவில்லை, தொடர்ந்து சின்ன வெங்காயத்தையும் பயிர் செய்யமுடியவில்லை என்று தெரிவிக்கும் விவசாயிகள் சின்ன வெங்காயத்திற்கு குறைந்த பட்ச விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
இதற்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நூதன முறையில் போராட்டம் நடத்திய விவசாயிகள் கடந்த 1995ம் ஆண்டு முதல் இந்த கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகிறோம். ஆனால் பெரிய வெங்காயத்திற்கு குறைந்த பட்ச விலை நிர்ணயம் செய்துள்ள மத்திய மாநில அரசுகள், சின்னவெங்காயத்தை கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக போராடியும் செவி சாய்க்கவில்லை என்று தெரிவிக்கின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் நல்ல விளைச்சல் இருக்கும் போது, விலை இல்லை, நல்ல விலை இருக்கும் போது போதிய விளச்சல் இல்லை என்ற நிலையில் நீடித்து வருகிறது. ஆனால் இடைத்தரகர்கள் மட்டும் கொள்ளை லாபம் பார்த்து வருகின்றினர் என்று கூறும் விவசாயிகள், ஆண்டு தோறும் நஷ்டத்தை மட்டுமே சந்தித்து வரும் எ ங்களுக்கு இனியும், சின்ன வெங்காயத்திற்கு குறைந்த பட்சவிலை நிர்ணயம் செய்யாவிட்டால், விவசாயத்தை விட்டுவிட்டு, எங்கள் நிலத்தை விலை நிலங்களாக மாற்றி விற்பனை செய்து விட்டு, வேறு வேலைக்கு செல்வதை தவிர வேறு வழியில்லை என்று தெரிவிக்கின்றனர்.
உழுதவன் கணக்குப்பார்த்தால் உழக்குக்கு கூட மிஞ்சாது என்பதை போல, விவசாயிகளின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்ற மத்திய மாநில அரசுகள் போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.