மரியுபோல் நகரில் ஆஸ்பத்திரியை கைப்பற்றி 500 பேரை பணய கைதிகளாக பிடித்தது ரஷியா.
உக்ரைனில் உள்ள மரியுபோல் நகரை ரஷிய படைகள் சுற்றி வளைத்துள்ளன. அங்குள்ள பிராந்திய தீவிர சிகிச்சை ஆஸ்பத்திரியை நேற்று முன்தினம் இரவில் ரஷிய படைகள் தாக்குதல் நடத்தி கைப்பற்றின. அங்கு 500 பேரை பணயக்கைதிகளாக ரஷியா பிடித்துள்ளது.
அந்த ஆஸ்பத்திரி அருகில் உள்ள வீடுகளில் இருந்து 400 பேரை வலுக்கட்டாயமாக ஆஸ்பத்திரிக்கு நகர்த்தி, அவர்களை பணயக்கைதிகளாக பிடித்தனர்.
ஆஸ்பத்திரி கட்டிடத்துக்குள் இருந்த டாக்டர்கள், நோயாளிகள் என 100 பேரும் பணயக்கைதிகள் ஆகி உள்ளனர்.
பணயக்கைதிகளக பிடித்த 500 பேரை ரஷிய படைகள் மனித கேடயங்களாக பயன்படுத்தியதாகவும், யாரையும் வெளியேற அனுமதிக்கவில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ரஷிய படைகளின் தாக்குதலில் ஆஸ்பத்திரியின் பிரதான கட்டிடம் பெருமளவில் சேதம் அடைந்துள்ளதாகவும், அடித்தளத்தில் அமைக்கப்பட்ட தற்காலிக வார்டுகளில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
ராணுவ கட்டமைப்புகள் மீது மட்டுமே குறி வைக்கப்படும் என்று முதலில் கூறி போரைத்தொடங்கிய ரஷியா, இப்போது ஆஸ்பத்திரிகளைக்கூட விடாமல் தாக்கி வருவது உலக நாடுகளை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.