அனைத்து நேரங்களிலும் தயார்நிலையில் ராணுவம்: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

அனைத்து நேரங்களிலும் ராணுவம் தயார்நிலையில் வைத்திருக்க முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டிஆர்டிஓ) ஆய்வுக்கூடமான விமானவியல் மேம்பாட்டு அமைப்பு வளாகத்தில் விமான கட்டுப்பாட்டு அமைப்பின் ஒருங்கிணைப்பு வளாகத்தின் புதிய கட்டடத்தை பெங்களூரில் வியாழக்கிழமை நடந்த விழாவில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார்.

டிஆர்டிஓ}வின் சொந்த தொழில்நுட்பத்தில் 45 நாள்களில் கட்டி முடிக்கப்பட்டுள்ள 1.3 லட்சம் சதுர அடி பரப்பிலான 7 அடுக்குகள் கொண்ட ஒருங்கிணைப்பு வளாகத்தில் போர்விமானங்களுக்கான வான் மின்னணுவியல் ஆய்வு, அதிநவீன நடுத்தர போர் விமானங்களின் கட்டுப்பாட்டு முறைகளின் ஆராய்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படவிருக்கின்றன. இந்த விழாவில் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, மத்திய ராணுவத் துறை செயலாளர், டிஆர்டிஓ தலைவர் டாக்டர் ஜி.சதீஷ் ரெட்டி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

விழாவில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியது:
நாட்டில் மட்டுமல்ல, உலக அளவில் தனித்துவம் வாய்ந்த முதல் திட்டம் இது. புதிய இந்தியாவின் புதிய ஆற்றல் இதில் அடங்கியுள்ளது. இந்த ஆற்றலில், தொழில்நுட்பம், பொறுப்புணர்வு, பொது நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் கல்விக்கூடங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு, பிரதமர் மோடியின் கனவுத் திட்டமான தற்சார்பு இந்தியா திட்டம் ஆகியவை அடங்கியிருக்கின்றன.

இந்த ஒருங்கிணைப்பு வளாகம், நீண்டகாலத்திற்கு தேசிய பாதுகாப்பை வலிவூட்டுவதாக அமையும். இந்த வளாகத்தில் போர்விமான விமானிகளுக்கு பயிற்சி அளிக்கும் ஒத்தியக்க கட்டமைப்பும் (சிமுலேட்டர்) உள்ளது. இதுதான் இந்த வளாகத்தின் முக்கிய பகுதி. எவ்வித இழப்புகளுக்கும் இடமளிக்காமல், கற்றுக் கொள்ளும் வாய்ப்பு ஒத்தியக்க கட்டமைப்பு மூலம் கிடைக்கும்.

இந்த வளாகம் கலப்புத் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் கட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் நேர விரயம், பொருள் இழப்பு உள்ளிட்டவற்றைத் தவிர்த்து கட்டுமான திட்டப்பணிகளை விரைந்து முடிக்க முடியும். கட்டுமானத் தொழிலில் கலப்புத் தொழில்நுட்பம் புதிய மைல்கல்லாகும். இதன்மூலம் கட்டுமானத் தொழில்நுட்பத்தில் இந்தியா முதன்மை நாடாக உருவாகும்.
உலகின் பலம் பொருந்திய நாடுகள் சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றன. நமது ராணுவத் தேவைகளும் அதிகரித்துள்ளன. ராணுவப்படைகளை நவீனமாக்கிக்கொண்டு இருப்பதே காலத்தின் தேவையாகும். எல்லா நேரங்களிலும் ராணுவப் படைகளை தயார்நிலையில் வைத்திருக்க முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

ராணுவக் கட்டமைப்பின் பலத்தை பெருக்கிக் கொள்வதில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறோம். தொழில்நுட்பம் அல்லது பொருட்கள், சேவைகள் அல்லது வசதிகள் உள்ளிட்டவற்றை நவீனப்படுத்துவதும், வேகமாக மேம்படுத்துவதும் முக்கியமாகும். தேசியப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் டிஆர்டிஓ}வின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
எதிர்கால தொழில்நுட்பங்களை வடிவமைப்பதுதான் டிஆர்டிஓ}வின் முக்கிய பணியாகும். அவற்றின் பலன்கள் பிற துறைகளுக்கும் கிடைக்கும் என்றார்.

Leave A Reply

Your email address will not be published.