மேற்கு வங்கத்தில் 10 பேர் உயிரோடு எரித்துக் கொலை
கிராமத்தின் துணைத் தலைவர் கொலை செய்யப்பட்டதால் ஆத்திரமடைந்த கும்பல் ஒன்று, பல குடிசைகளுக்கு தீ வைத்ததில் சுமார் 10 பேர் உயிரோடு எரித்துக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேற்கு வங்க மாநிலம் பிர்பம் அருகே ராம்புரஹத் பகுதியில் உள்ள பகுடி கிராமத்தின் துணைத் தலைவர் திங்கள்கிழமை கொலை செய்யப்பட்ட நிலையில், அவரது ஆதரவாளர்கள் பல குடிசைகளுக்கு தீ வைத்ததில் சுமார் 10 பேர் உயிரோடு எரித்துக் கொலை செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பரோசல் கிராமத்தின் துணைத் தலைவராக இருந்தவர் பது ஷேக். இவர் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்தார்.
இந்த சம்பவம் குறித்து அறிந்ததும் ஆத்திரமடைந்த இவரது ஆதரவாளர்கள் சிலர், எதிர்த் தரப்பினரின் பகுதிகளுக்குச் சென்று அங்கிருந்த குடிசைகளுக்குத் தீ வைத்தனர்.
தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் விரைந்துச் சென்ற தீயணைப்பு வீரர்களை, சம்பவ பகுதிக்குள் நுழைய விடாமல் அந்த கும்பல் தடுத்துள்ளது. சம்பவ பகுதியில் குறைந்தபட்சம் 10 எரிந்த உடல்களைக் கண்டதாகக் கூறுகிறார்கள். பல உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு கருகிவிட்டதாகவும், ஒரே ஒரு வீட்டிலிருந்து 7 உடல்களைக் கைப்பற்றியதகாவும் கூறுகிறார்கள்.