ஒ.பன்னீர்செல்வத்திடம் மருத்துவம் சார்ந்த கேள்விகள் கேட்க எதிர்ப்பு… ஆறுமுகசாமி ஆணையத்திடம் அப்பல்லோ தரப்பு வாதம்
தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி உயிரிழந்தார். அவரது மரணத்தில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்ததை தொடர்ந்து இது தொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. ஜெயலலிதாவின் உறவினர்கள், பாதுகாவலர்கள், மருத்துவர்கள் அரசு உயர் அதிகாரிகள் என இதுவரை 150க்கும் மேற்பட்டோர் ஆணையத்தில் ஆஜராகி விளக்கமளித்துள்ளனர்.
இந்நிலையில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையத்தில் இரண்டாவது நாளாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆஜராகி விளக்கமளித்தார். அப்போது ஜெயலலிதாவுக்கு இதயத்தில் இருந்த பிரச்னை தொடர்பாக ஓ.பன்னீர்செல்வத்திடம் ஆறுமுகம் ஆணையம் கேள்வி எழுப்ப முயன்றது. அதற்கு அப்பல்லோ தரப்பு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார். சிகிச்சை தொடர்பாக எதுவும் தனக்கு தெரியாது என நேற்றே வாக்குமூலம் அளித்த நிலையில் இன்று அது தொடர்பான கேள்விகளை எழுப்ப கூடாது என்று அப்பல்லோ வழக்கறிஞர் தெரிவித்தார்.
ஜெயலலிதாவுக்கு இருந்த வியாதி தொடர்பாகவோ, அதற்கு அவர் எடுத்துக்கொண்ட மருந்துகள், அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து தான் கேள்வி எழுப்பக் கூடாது. வியாதி இருந்தது உங்களுக்கு தெரியுமா என கேள்வி எழுப்பலாம் என ஆறுமுகசாமி ஆணைய வழக்கறிஞர் விளக்கம் தெரிவித்தார்.
மருத்துவம் சார்ந்த கேள்விகள் கேட்கும் போது முந்தைய சாட்சிகள் கூறிய கருத்துக்களை முன்கூட்டியே வழங்க வேண்டும், மேலும் மருத்துவர்களை உடன் வைத்திருக்க வேண்டும் என்றும் அப்பல்லோ வழக்கறிஞர் வாதிட்டார். இதற்கு ஆறுமுகசாமி ஆணையம் உங்களின் குறுக்கீடு பதிவு செய்யப்பட்டது என்று தெரிவித்துள்ளனர்.
இதனிடைய மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு என்னென்ன சிகிச்சைகள் வழங்கப்பட்டன என்பது குறித்து விவரம் எதுவும் தனக்கு தெரியாது என ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வாக்குமூலம் அளித்தார் என்பது குறிப்பிடதக்கது.