ரேஷனில் வழங்கும் அரிசியில் புழு, வண்டு… ஆதாரத்துடன் அதிமுக நிர்வாகி புகார்
பொதுமக்களுக்கு விநியோகம் செய்யும் இலவச அரிசியில் புழு, பூச்சி இருப்பதாக ஆதாரத்துடன் அதிமுக முன்னாள் எம்எல்ஏ வையாபுரி மணிகண்டன் புகார் கூறியுள்ளார்.
புதுச்சேரியில் கொரோனா பரவல் காரணமாக ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் சிகப்பு ரேஷன்கார்டுதாரர்களுக்கு உதவிடும் வகையில் மத்திய அரசின் திட்டத்தின் கீழ் அரிசி, தானியங்கள் இலவசமாக வழங்கப்பட்டன.
இந்த அரிசி குடிமைப்பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் மூலம் புதுச்சேரியில் பள்ளிகள் மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. காலத்தோடு இந்த அரிசியை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அரிசியில் வண்டு, புழு, பூச்சிகள் உருவாகிவிட்டன.
புதுச்சேரியின் முத்தியால்பேட்டை தொகுதி பொதுமக்களுக்கு வண்டு, புழு, பூச்சிகளோடு அரிசி விநியோகம் செய்யப்பட்டது. இதனை சம்பந்தப்பட்ட இடத்திற்கே சென்று பார்த்த முன்னாள் எம்எல்ஏவும் தேர்தல் பிரிவு செயலாளருமான வையாபுரி மணிகண்டன் வன்மையாக கண்டித்தார்.
அரிசியில் வண்டு, புழு, பூச்சிகளை கண்டு பொதுமக்கள் மிகவும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்துள்ளனர். இந்த அரிசியை பொதுமக்கள் பயன்படுத்தினால் பல்வேறு உடல் உபாதைகளுக்கும், நோய் தாக்குதலுக்கும்தான் ஆளாக வேண்டியிருக்கும். மக்களின் பயன்பாட்டுக்கு வழங்கப்படும் அரசி தரமானதாக இருக்க வேண்டும்.
புதுச்சேரி குடிமைப்பொருள் வழங்கல்துறை அதிகாரிகள் காலதாமதமின்றி வண்டு, புழு, பூச்சிகளோடு உள்ள அரிசியை உடனடியாக மாற்றித்தர வேண்டும். இருப்பு வைத்துள்ள அரிசிகளையும் பரிசோதனை செய்து தரமான அரிசியை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என மணிகண்டன் வலியுறுத்தினார்.
பிரதமர் அறிவித்த திட்டத்தையே அதிகாரிகள் அலட்சியத்துடன் செயல்பட்டு அதன் பயனை மக்களுக்கு காலத்தோடு கிடைக்காமல் செய்துவிட்டனர் என குற்றம்சாட்டினார்.