விருதுநகர் பாலியல் குற்றச்சாட்டில் கைதான ஜுனைத் அகமது திமுகவில் இருந்து நீக்கம்.. துரைமுருகன் அறிவிப்பு
விருதுநகர் மாவட்டத்தில் கடந்த ஒரு வருடமாக இளம்பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கிய திமுக பிரமுகர்கள், பள்ளி மாணவர்கள் என எட்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள ஜுனைத் அகமது திமுகவின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
விருதுநகரை சேர்ந்த 22 வயது பெண் தனியார் ரெடிமேட் ஆடைகள் தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். மேலரத வீதியை சேர்ந்த திமுக பிரமுகர் ஹரிஹரன் என்பவருடன் அந்த பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. காதலன் என்பதால் அந்தபெண் அவருடன் தனிமையில் சந்தித்து பேசிவந்துள்ளார் இந்நிலையில், காதலியுடன் நெருக்கமாக இருந்ததை ரகசியமாக ஹரிஹரன் வீடியோ எடுத்து வைத்துள்ளார்.
மொன்னி தெருவைச் சேர்ந்த திமுக நிர்வாகி ஜீனைத் அகமது, பிரவீன் மற்றும் அதே தெருவைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் 4 பேரும் அந்த வீடியோவை பார்த்துள்ளனர். இதனையடுத்து ஜீனைத் அகமது அந்த ஆபாச வீடியோவை காட்டி மிரட்டி அந்த பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். ஹரிஹரன் மற்றும் அவரது நண்பர் உட்பட 7 பேர் ஆபாச வீடியோவை காட்டி மிரட்டி இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளனர்.
இது தொடர்பாக விருதுநகர் பாண்டியன் நகர் காவல்நிலையத்தில் அப்பெண் புகார் கொடுத்தார். இப்புகாரின் பேரில் திமுகவை சேர்ந்த இருவர், கூலி தொழிலாளிகள் இருவர், பள்ளி மாணவர்கள் 4 பேர் என 8 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
பொள்ளாச்சி பாலியல் சம்பவம் போல் நிகழ்ந்துள்ள இந்த சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்று பல்வேறு கட்சித் தலைவர்களும் வலியுறுத்தியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக திமுக எம்.பி. கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘விருதுநகர் மாவட்டத்தில் 22 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய நபர்கள் கைது செய்யப்பட்டு இருப்பது ஆறுதலைத் தருகிறது. குற்றம் செய்தவர்கள் யாராக இருப்பினும் கடுமையாகத் தண்டிக்கப் படவேண்டும்’ என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் கைது செய்யப்பட்டுள்ள ஜுனைத் அகமது திமுகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், விருதுநகர் வடக்கு மாவட்டம், விருதுநகர் நகரத்தைச் சேர்ந்த ஜுனைத் அகமது கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.