தமிழகம் வரும் ஈழத்தமிழர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த வேண்டும் – முதல்வருக்கு வன்னி அரசு கோரிக்கை
இலங்கையில் இருந்து தமிழ்நாடு வரும் ஈழத்தமிழர்களின் வாழ்வாதாரத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதிப்படுத்த வேண்டும் என வன்னி அரசு கேட்டுக்கொண்டுள்ளார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் அங்கு பால், உணவு, பெட்ரோல், டீசல் போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால், இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு அகதிகளாக படையெடுப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் மன்னார் பகுதியில் இருந்து கைக்குழந்தையுடன் 6 இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடி பகுதிக்கு வந்த நிலையில், வவுனியா பகுதியிலிருந்து மேலும் 10 பேர் தமிழகத்திற்கு அகதிகளாய் வந்துள்ளனர்.
இலங்கையில் இருந்து தமிழ்நாடு வரும் ஈழத்தமிழர்களின் வாழ்வாதாரத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதிப்படுத்த வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் வன்னி அரசு கேட்டுக்கொண்டுள்ளார். இதுதொடர்பாக வன்னி அரசு தனது ட்விட்டர் பதிவில், “இலங்கையில் இரண்டாவது போர் தொடங்கி உள்ளது. அது தான் பொருளாதார யுத்தம். இந்த போரிலும் பெரிதும் தமிழீழத்தமிழர்களே பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
சிங்கள இனஒடுக்குமுறையால் நாட்டை விட்டு தமிழர்களே அகதிகளாக வெளியேறினர். இப்போது,பொருளாதார நெருக்கடியால் தமிழர்களே அகதிகளாக தமிழ்நாட்டுக்கு தஞ்சம் புகுந்துள்ளனர். பொருளாதார நெருக்கடியால் தமிழ்நாட்டுக்கு வருகை தரும் ஈழத்தமிழர்களை மாண்புமிகு முதல்வர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்று வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த வேண்டும். ஏற்கனவே உள்ள முகாம்களுக்கு அனுப்பாமல் தனி முகாம்களை அமைக்க வேண்டும்.வழக்கு பதிவு செய்து சிறைப்படுத்தக்கூடாது” எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.