இந்தியாவில் பாரசிட்டமால் உள்பட 800 அத்தியாவசிய மருந்துகளின் விலை உயர்கிறது…
இந்தியாவில் பாராசிட்டமால் உள்ளிட்ட 800 அத்தியாவசிய மருந்துகளின் விலையை, ஏப்ரல் 1ம் தேதி முதல் உயர்த்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
பட்டியலிடப்படாத மற்றும் தேசிய அளவில் அத்தியாவசியமானது என பட்டியலிடப்பட்ட எனும், இரண்டு வகைகளில் மருந்துகள் விற்பனை செய்யப்படுகின்றன.
பட்டியிடலப்பட்ட மருந்துகளில் பெரும்பாலானவை அரசால் கொள்முதல் செய்யப்பட்டு, அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளில், மருந்துகளை தயாரிப்பதற்கான மூலப்பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. இதன் காரணமாக, பட்டியலிடப்பட்ட மருந்துகளின் விலையை10 சதவிகிதமும், பட்டியலிடப்படாத மருந்துகளின் விலையை 20 சதவிகிதமும் உயர்த்த, மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் கோரிக்கை வைத்திருந்தன.
இந்நிலையில், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் வழங்கிய மொத்த விலைக் குறியீட்டின் அடிப்படையில், பட்டியலிடப்பட்ட அத்தியாவசியமான மருந்துகளின் விலையை 10 புள்ளி 7 சதவிகிதமும், பட்டியலிடப்படாத மருந்துகளின் விலையை 10 சதவிகிதமும் உயர்த்தப்படுவதாக, தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் அறிவித்துள்ளது.
பட்டியலிடப்படாத மருந்துகளின் விலையை காட்டிலும், பட்டியலிடப்பட்ட மருந்துகளின் விலையை கூடுதலாக உயர்த்த அனுமதிக்கப்படுவது இதுவே முதன் முறையாகும். அதன்படி, காய்ச்சல், தொற்று நோய்கள், இதய நோய்கள், உயர் ரத்த அழுத்தம் மற்றும் உடல்வலி உள்ளிட்டவற்றிற்கு பயன்படுத்தப்படும்,
பாராசிட்டமால், ஃபெனோபார்பிடோன், ஃபெனிடோயின் சோடியம், அசித்ரோமைசின் உள்ளிட்ட 800 மருந்துகளின் விலை ஏப்ரல் 1ம் தேதி முதல் உயர உள்ளது.
கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு, வழங்கப்படும் சில மருந்துகளும் இதில் அடங்கும். ஏற்கனவே எரிபொருட்களின் விலை உயர்வு பொதுமக்களை வாட்டி வரும் நிலையில், மருந்துகளின் விலையும் உயர்வது கலக்கமடைய செய்துள்ளது.