கோட்டாவுடன் பேச்சு தொடரும்; அரைகுறைத் தீர்வை ஏற்கோம்! கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் திட்டவட்டம்.
“நிரந்தரமான அரசியல் தீர்வைக் காண்பதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசுடன் நாங்கள் தொடர்ந்து பேசுவோம். எனினும், அரைகுறையான அரசியல் தீர்வை நாங்கள் ஒருபோதும் ஏற்கவேமாட்டோம். இதை ஜனாதிபதியிடம் நேரில் எடுத்துரைத்தோம்.”
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
ஜனாதிபதியுடனான சந்திப்பு தொடர்பில் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஜனாதிபதியிடம் நாங்கள் தெரிவித்தோம். நியாயமான – நிரந்தரமான – நடைமுறைப்படுத்தக்கூடிய – அதியுச்ச அதிகாரப் பகிர்வு அடங்கிய ஒரு அரசியல் தீர்வு வராவிட்டால் அதை நாங்கள் ஏற்கமாட்டோம்.
இற்றை வரையில் நடைபெற்ற கருமங்களின் அடிப்படையில் – இற்றை வரையில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளின் அடிப்படையில் நிரந்தரமான அரசியல் தீர்வைக் காணவேண்டும்.
இதற்காக அரசுடன் நாங்கள் வெளிப்படையாகத் தொடர்ந்து பேசத் தயார்.
தீர்வுக்கான எமது இந்த நிலைப்பாட்டில் நாங்கள் எப்போதும் உறுதியாக நிற்போம் என்றும், இதிலிருந்து ஒருபோதும் பின்வாங்கமாட்டோம் என்றும் ஜனாதிபதியிடம் கூறினோம்.
வடக்கில் அரச திணைக்களங்களாலும் இராணுவத்தாலும் அபகரிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் காணிகளை விடுவிக்க வேண்டும் எனவும் ஜனாதிபதியிடம் கோரினோம். பேச்சின் பின்னர் அது தொடர்பில் அரசு நடவடிக்கைகளை எடுத்துள்ளது என அறிந்தோம். எனினும், காணிகள் தாமதமின்றி படிப்படியாக விடுவிக்கப்பட வேண்டும்”- என்றார்.