இம்ரான் கானுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம், பாராளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதன் மீது, 31ல் வாக்கெடுப்பு நடக்க உள்ளது.
முன்னாள் கிரிக்கெட் கேப்டனும், பாகிஸ்தான் தெஹ்ரிக் – இ – இன்சாப் கட்சித் தலைவருமான இம்ரான் கான், பாகிஸ்தான் பிரதமராக உள்ளார்.
கடந்த 2018ல் நடந்த தேர்தலில், அவர் சில கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடித்தார்.
அதற்குப் பின் நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இதற்கு, ‘இம்ரான் கானின் கொள்கைகளே காரணம்’ என எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின. இதையடுத்து, இம்ரான் கானுக்கு எதிராக, எதிர்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை தாக்கல் செய்வதாக அறிவித்தன.
இதற்கிடையே, கூட்டணி கட்சிகள் மற்றும் சொந்த கட்சி எம்பிக்கள் சிலரும் இம்ரான் கானுக்கு எதிராக போர்க் கொடி தூக்கியுள்ளனர்.
இதனால், அவர் பதவியில் நீடிப்பது கேள்விக்குறியாகி உள்ளது.இந்நிலையில், இம்ரானுக்கு எதிராக, எதிர்க்கட்சித் தலைவர் ஷபாஸ் ஷெரீப் நம்பிக்கையில்லா தீர்மானத்தை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இதை விவாதத்துக்கு எடுத்துக் கொள்வதற்கான வாக்கெடுப்பு நேற்று நடந்தது. மொத்தமுள்ள எம்.பி.,க்களில், 20 சதவீதம் பேர், அதாவது 68 பேரின் ஆதரவு இருந்தால் இந்தத் தீர்மானம் நிறைவேறும்.
அதே நேரத்தில், தீர்மானத்துக்கு ஆதரவாக, 161 பேர் வாக்களித்தனர். இதையடுத்து, நாளை மறுதினம் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடக்க உள்ளது.
மொத்தமுள்ள 342 எம்.பி.,க்களில், 172 பேர் ஆதரவு இருந்தாலே தீர்மானம் நிறைவேறிவிடும். அதைத் தொடர்ந்து, பதவியில் இருந்து இம்ரான் கான் விலக நேரிடும்.
ஏற்கனவே இம்ரான் கானுக்கு எதிராக கூட்டணி கட்சிகள் மற்றும் சொந்தக் கட்சி எம்.பி.,க்கள் போர்க் கொடி தூக்கியுள்ளனர்.
இந்நிலையில், தீர்மானத்தை ஏற்பதற்கான வாக்கெடுப்பில், 161 பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதனால், இம்ரான் கான் பதவியில் நீடிப்பது இழுபறியாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.