நாடு அதலபாதாளத்தில்; சகல துறைகளும் வீழ்ச்சி.
“தொலைநோக்கு இல்லாத மற்றும் வினைத்திறன் இல்லாத அரசின் செயற்பாடுகளால் நாடு அதலபாதாளத்தில் வீழ்ந்துள்ளது. அதுவே இன்று சகல துறைகளும் வீழ்ச்சியடையக் காரணமாக உள்ளது.”
இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
வர்த்தக சபை, கைத்தொழில் சபை, நிர்மாணக் கைத்தொழில், ஏற்றுமதியாளர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் பிரதிநிதிகள் குழுவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையேயான சந்திப்பு எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைக்கான காரணங்கள் குறித்து உரிய கவனத்தைச் செலுத்தி அதற்கான தீர்வுகள் காணப்பட வேண்டும்.
கைத்தொழிலைக் கட்டியெழுப்புவதற்கான விசேட வேலைத்திட்டம் வகுக்கப்பட வேண்டும். அது எமது கொள்கையாகும்.
கைத்தொழில்களை மேம்படுத்துவதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து, அதற்குத் தேவையான ஊக்கத்தை அளிக்க வேண்டும். ஏற்றுமதிக்கு முன்னுரிமை வழங்கும் வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்க வேண்டும்.
நாட்டுக்குத் தேவையான டொலர்களை ஈட்டவும், வேலைவாய்ப்புகளை அதிகரிக்கவும் கைத்தொழில் உதவியாக இருக்கும்” – என்றார்.