மன்மத லீலை விமர்சனம்.

ஒரு வீடு, ஒரு வாசல் என 2020 இல் மனைவி மகளோடு வாழ்ந்து வரும் அசோக் செல்வனுக்கு, மனைவி மகள் ஊருக்குப் போகும் கேப்பில் ஒரு அழகு பதுமை மூலமாக ஒரு ‘வாய்ப்பு’ வருகிறது. அதை அவர் பயன்படுத்தினாரா? பயன்பட்டாரா? அடுத்து என்ன நடந்தது? இதுவொரு லைவ் கதை.

வருடம் 2010! முரட்டு சிங்கிளாக இருக்கும் அசோக் செல்வன் முகநூல் மெஸெஞ்சர் மூலமாக ஒரு பெண்ணுக்கு நூல் விட்டு அப்பெண்ணின் வீட்டிற்கே சம்பவம் நடத்தக் கிளம்பிச் செல்கிறார். சம்பவம் என்னானது என்பது ஒருகதை. இந்த இரண்டு கதைகளையும் சரியாக முடித்துப் போட்டுப் படத்தை முடித்ததில் தான் வெங்கட்பிரபு வெற்றி பெறுகிறார்.

அசோக் செல்வன் அலட்டிக் கொள்ளாமல் அசால்டாக நடித்துள்ளார். 90’ஸ் கிட்ஸ் அனைவரும் பொறாமைப்படும் நடிப்பும் லீலையும். ஸ்ரும்தி வெங்கட், சம்யுக்தா ஹெக்டே, ரியாஸ்யுமன் ஆகிய மூவரும் கொடுத்த வேலைக்குக் குறை வைக்கவில்லை. ரியாஸ்வுமன் மட்டும் கொடுத்த வேலையை விட, கொடுத்த சேலையைத் தாறுமாறாகக் கட்டி ரசிகர்களை உசுப்பேற்றும் வேலையைச் செய்துள்ளார். ஜெயப்பிரகாஷ் கேரக்டர் நேர்த்தியாக உள்ளது.

சின்னச் சின்ன லோக்கேசன்களிலே கேமராவில் பிரம்மாண்டம் காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர். எடிட்டர் எங்கு வெட்டவேண்டும் என்பதைவிட எங்க வெட்டாமல் இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்திருக்கிறார். பின்னணி இசையில் ப்ரேம்ஜி குறை தெரியாத அளவிற்கு நிறைவான வேலையைச் செய்துள்ளார்.

கள்ளக்காதல் என்ற லைனைக் கொண்டு காட்சி வழியாகப் பெரிய ஆபாசம் ஏதுமின்றிப் படத்தைக் கொடுத்துள்ளார் இயக்குநர். படத்தில் ஒரு த்ரில்லர் மூட் கொடுத்து பின்பாதியில் ஆச்சர்யப்படுத்தியுள்ளார்.

மேலும் இப்படம் 18+ கன்டென்ட் என்பதால் சில இடங்களைப் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை போல. முன்பாதியில் இன்னும் வசனங்களைக் காமெடியாக எழுதி இருந்தால் மன்மதலீலை முழுவதும் ஈர்த்திருக்கும். இருந்தாலும் படம் பாதி கிணற்றைத் தாண்டி விடுவதால் ஒருமுறை பார்த்து என்ஜாய் பண்ணலாம்.

Leave A Reply

Your email address will not be published.