அரசுக்கு எதிராகக் கொழும்பில் எதிரணி பெரும் போராட்டம்! – பேரணியைத் தடுத்து நிறுத்தியது பொலிஸ்.
மக்கள் விரோத அரசின் தன்னிச்சையான சர்வாதிகார நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் எதிர்க்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல கட்சிகளைச் சார்ந்த உறுப்பினர்களின் பங்கேற்புடன் இன்று கொழும்பு சுதந்திர சதுக்கத்துக்கு அருகில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
எனினும், அங்கிருந்து சுதந்திர சதுக்கத்தை நோக்கி ஆரம்பமான பேரணியைப் பொலிஸார் தடுத்து நிறுத்தினர்.
சுதந்திர சதுக்கத்துக்குச் செல்லும் சகல நுழைவு வீதிகளையும் வீதித்தடைகள் மற்றும் காவலரண்கள் தடைகளை ஏற்படுத்தி பொலிஸாருடன் பெருமளவு விசேட அதிரடிப் படையினரும் குவிக்கப்பட்டிருந்தனர். எதிரணியினரின் ஆர்ப்பாட்டப் பேரணி முன்னோக்கிச் செல்ல அவர்கள் அனுமதிக்கவில்லை.
இதன்போது எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், பாதுகாப்புத்துறையினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரனும் பங்கேற்றிருந்தார்.
நாட்டில் அவசரகாலச் சட்டம் மற்றும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள வேளையில் இவ்வாறு எதிரணியினர் ஆர்ப்பாட்டப் பேரணியை முன்னெடுப்பது முறையற்றது எனவும், அதனால் அதைத் தடுத்து நிறுத்தினோம் எனவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.