தொடர்சியாக மூன்று போட்டியிலும் தோல்வியடைந்த சென்னை அணி.
15வது ஐபிஎல் தொடரின் 11வது போட்டியான நேற்றைய போட்டியில் ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மாயன்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின.
மும்பை Brabourne மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக லிவிங்ஸ்டன் 60 ரன்களும், ஷிகர் தவான் 33 ரன்களும் எடுத்தனர்.
இதனையடுத்து 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எட்டக்கூடிய இலக்கை துரத்தி களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பேட்டிங்கில் மிக மோசமாக செயல்பட்டது. சென்னை அணியின் துவக்க வீரர்களான ருத்துராஜ் கெய்க்வாட் 1 ரன்னிலும், உத்தப்பா 13 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர். அடுத்தடுத்து களத்திற்கு வந்த மொய்ன் அலி (0), அம்பத்தி ராயூடு (13) மற்றும் ரவீந்திர ஜடேஜா (0) ஆகியோரும் வந்த வேகத்தில் விக்கெட்டை பறிகொடுத்தனர். இதனால் சென்னை அணி 36 ரன்களுக்கே ஐந்து முக்கிய விக்கெட்டுகளை இழந்தது.
இதன்பின் கூட்டணி சேர்ந்த சிவம் துபே – தோனி ஜோடி போட்டியின் தன்மையை உணர்ந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. தோனி பொறுமையாக விளையாட, மறுமுனையில் சீரான இடைவேளையில் சிக்ஸர் மற்றும் பவுண்டரிகள் அடித்த சிவம் துபே சென்னை அணியை சரிவில் இருந்து மீட்கும் வகையில் விளையாடினார்.
போட்டியின் 15வது ஓவர் வரை தாக்குபிடித்த இந்த ஜோடியை, லிவிங்ஸ்டன் தனது திறமையான பந்துவீச்சால் பிரித்தார், சிவம் துபே 57 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இதன்பின் களத்திற்கு வந்த டூவைன் பிராவோவையும் முதல் பந்திலேயே வெளியேற்றி போட்டியில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தினார் லிவிங்ஸ்டன்.
18வது ஓவர் வரை தாக்குபிடித்த தோனி அதிரடி ஆட்டத்தை ஆரம்பித்த உடன் ஒரு சிறிய தவறால் விக்கெட்டை இழந்தார், அடுத்தடுத்து வந்த வீரர்களும் பஞ்சாப் அணியின் பந்துவீச்சை தாக்குபிடிக்காததால் 18 ஓவர் முடிவில் 126 ரன்கள் மட்டுமே எடுத்த சென்னை அணி அனைத்து விக்கெட்டுகளை இழந்து 56 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்துள்ளது.
பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக ராகுல் சாஹர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். லிவிங்ஸ்டன் மற்றும் வைபவ் அரோரா தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இந்தநிலையில், பஞ்சாப் அணியுடனான இந்த தோல்வியுடன் சேர்த்து, தொடர்ச்சியாக மூன்று தோல்விகளை சென்னை அணி பதிவு செய்துள்ளது அந்த அணியின் ரசிகர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ரசிகர்கள் தங்களது வேதனைகளை சமூக வலைதளங்கள் மூலம் வெளிப்படுத்தி வருகின்றனர்.