உக்ரைன் நகரத்தில் ராணுவ எண்ணெய் கிடங்குகள் மீது ரஷியா ஏவுகணை வீச்சு.
உக்ரைன் நாட்டில் கருங்கடல் கடற்கரையோரம் அமைந்துள்ள துறைமுக நகரமான ஒடெசாவில் எரிபொருள் கிடங்கு மீது ரஷிய படைகள் நேற்று சூரிய உதயத்துக்கு முன்பாவே ஏவுகணை தாக்குதல்களை நடத்தின. இந்த நகரம் அடுத்தடுத்த தாக்குதல்களால் அதிர்ந்து போனது. பெருமளவில் கரும்புகை மண்டலமும் உருவானது.
இதுபற்றி உள்துறை மந்திரியின் ஆலோசகர் ஆண்டன் ஹெராஷ்செங்கோ சமூக வலைத்தளத்தில் குறிப்பிடுகையில், சில இடங்களில் தீப்பற்றி எரிந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சில ஏவுகணைகளை விமானப்படையினர் சுட்டு வீழ்த்தினர் என தெரிவித்துள்ளார்.
ஒடெசா நகரில் முக்கியமான கட்டமைப்பை ரஷிய ஏவுகணை தவிடுபொடியாக்கியது. இங்கு ராணுவம் பயன்படுத்தி வந்த எரிபொருள் சுத்திகரிப்பு ஆலையை ரஷிய படைகள் தாக்கி அழித்துள்ளதாக மற்றொரு தகவல் கூறுகிறது.
இந்த நகர வான்வெளியில் பல்வேறு டிரோன்கள் வரிசைகட்டி அணிவகுத்ததாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நகரில் 10 லட்சம் பேர் வசிக்கிறார்கள். இந்த நகரில் நேற்று நடத்தப்பட்ட தாக்குதல் பற்றி ரஷிய ராணுவ அமைச்சகம் கூறுகையில், ஒரு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையையும், 3 எண்ணெய் கிடங்குகளையும் ரஷிய படைகள் தாக்கி அழித்தன. இவற்றில் இருந்துதான் மைக்கோலெய்வ் நகரில் உள்ள உக்ரைன் ராணுவத்துக்கு எரிபொருள் சப்ளை ஆனது என தெரிவித்தது.
உக்ரைனின் புச்சா நகரத்தில் இருந்து ரஷிய படைகள் வெளியேறின. அங்கு தெருக்களில் வைத்துள்ள குப்பை கொட்டும் தொட்டிகளில் பொதுமக்களில் 20 பேரது உடல்கள் போடப்பட்டிருப்பது படங்களுடன் வெளியாகி உள்ளது.
இது நெஞ்சை நொறுக்குவதாக அமைந்துள்ளது. அவர்கள் மோசமான நிலையில் கொல்லப்பட்டு கிடந்ததாகவும், சிலரது கைகள் பின்புறமாக கட்டப்பட்டிருந்ததாகவும் ஊடகத்தகவல்கள் தெரிவிக்கின்றன. இங்கு ரஷியப்படைகள் நுழைந்த 2 அல்லது 3 நாளுக்குப்பிறகு, புச்சா நகரம் வழியாக கீவ் நோக்கி நகர்ந்த ரஷிய டாங்கிகளை உக்ரைன் படைகள் அழித்தன.
புச்சா நகரில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டு அவர்களது உடல்கள் குப்பைத்தொட்டிகளில் வீசப்பட்டிருப்பதற்கு ஜெர்மனி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அந்த நாட்டின் துணைப்பிரதமர் ராபர்ட் ஹேபெக், “இது பயங்கரமான போர்க்குற்றம். இதற்கு பதில் அளிக்காமல் இருக்க முடியாது” என்று கூறினார். இதுபற்றி சுதந்திரமான விசாரணை நடத்தி, போர்க்குற்ற சதிகாரர்களை குற்றவாளிக்கூண்டில் நிறுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
மரியுபோல் நகரம் ஒரு மாதத்திற்கு மேலாக ரஷிய படைகளின் முற்றுகையின் கீழ் உள்ளது. இங்கு நடத்தப்பட்ட தாக்குதல்கள் மிக பயங்கரமானவை ஆகும்.
தலைநகர் கீவை சுற்றியுள்ள நகரங்கள், சிறிய நகரங்கள் ஆகியவற்றில் ரஷிய படைகள் மீண்டும் அமர்த்தப்பட்டு, கடுமையாக சண்டையிட்டு வருகின்றன. இரு தரப்பிலும் அழிக்கப்பட்ட கவச வாகனங்கள், ராணுவ உபகரணங்கள் தெருக்களிலும், வயல்களிலும் சிதறிக்கிடந்தன.
இந்த சண்டைகளுக்குப்பின் கீவ் நகரைச்சுற்றிலும் உள்ள புறநகர்களில் ரஷிய படைகள் பின்வாங்கி உள்ளன. இதற்காக உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியை இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் நேற்று தொலைபேசியில் அழைத்து பாராட்டினார். இதை டுவிட்டரில் பதிவிட்ட விளாடிமிர் ஜெலன்ஸ்கி, இங்கிலாந்து சக்தி வாய்ந்த நட்பு நாடு என குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைனின் கிழக்கு மற்றும் தெற்கில் தனது படைகள் தங்கள் பாதுகாப்பு திறன்களை அதிகரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.