நையாண்டி மேளத்துக்கு நளினமாக ஆடிய பெண்கள்.. ராசிபுரத்தில் களைகட்டிய மாரியம்மன் கோயில் திருவிழா
ராசிபுரம் பகுதியில் நடந்த மாரியம்மன் கோயில் திருவிழாவில் நையாண்டி மேளத்திற்கு நளினமாக ஆடிய பெண்களின் வீடியோ தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே பழந்தின்னிபட்டி கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ செல்வ மாரியம்மன் திருக்கோயில் திருவிழா நிகழ்ச்சியில் அம்மன் பிரமாண்டமான வாகனத்தில் வீதிகளில் ஊர்வலமாக வரும்போது அந்தப் பகுதியைச் சேர்ந்த பெண்கள் , ஆண்களுக்கு இணையாக நையாண்டி மேளத்திற்கு நளினமான நடனத்தை அம்மன் முன் ஆடியது அங்கு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. கலைகளில் எவ்வளவுக்கு எவ்வளவு மண்சார்ந்த தன்மையை முன்னெடுத்து செல்கிறோமோ அந்த அளவுக்கு அந்தக் கலைகள் அத்தனையும் உலகளாவிய தன்மையை பெற்று விடுகின்றன என்பதே உண்மை.
பல்வேறு நாடுகள் தங்கள் கலைகளை திரைப்படங்கள், ஊடகங்கள் வாயிலாக வெளியிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்க்கின்றனர்.
ஆனால் தமிழகத்தில் அதற்கான வாய்ப்புகள் குறைந்தே காணப்படுகிறது. குறிப்பாக திருவிழாக்களில் தென் தமிழகத்தில் பிரபலமான நையாண்டி நடனமும், மேளத்திற்கு தகுந்தாற்போல ஆடுவதுதான் சிறப்பு. இதில் ஆண்களுக்கு இணையாக பெண்களும் சேர்ந்து நளினத்துடன் ஆடுவது அனைவரின் கவனத்தை ஈர்ப்பதாகும்.பாமர மக்களிடையே இந்த நடனம் என்பது மிகவும் புகழ்பெற்ற விஷயம். இந்தக் கலையும் தற்போது அழிந்து வருவதாக சொல்லப்பட்டு வருகிறது. எனினும் இந்த பாரம்பரிய நடனத்தை வருடம் தவறாமல் இந்த பகுதி மக்கள் தங்களின் கோயில் திருவிழாக்களில் ஆடி மகிழ்கின்றனர் என்பதே நிதர்சனம்.
அப்படிப்பட்ட பாரம்பரிய நிகழ்ச்சியானது, நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டம் வெண்ணந்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட பழந்தின்னிபட்டி கிராமத்தில் உள்ள அருந்ததியர் காலனியில் எழுந்தருளியுள்ள அருள்மிகு செல்வ மாரியம்மன் திருக்கோயில் திருவிழாவில் அரங்கேறியது. மார்ச் மாதம் 31-3-22 முதல் ஏப்ரல் மாதம் 8-4-22 தேதி வரை திருவிழா நடைபெறும் .இந்த திருவிழாவில் இந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் குடும்பத்தோடு வந்து அம்மனை வழிபட்டு திருவருள் பெறுவார்கள்.தினந்தோறும் ஸ்ரீசெல்வமாரியம்மன் வாகனத்தில் ஊர்வலமாக, நையாண்டி மேளம், குறவன் குறத்தி ஆட்டம் வாணவேடிக்கையுடன் வீதிகளில் உலா வருவாள். ஒவ்வொரு கட்டளைதாரர்கள் சிறப்பு பூஜைகள் செய்வார்கள்.
செல்வ மாரியம்மன் திருக்கோயில் திருவிழாவில் அம்மன் வீதி உலா வரும்போது ஆண்களுக்கு இணையாக அந்த பகுதியை சேர்ந்த கல்லூரி பெண்களும் திருமணமான பெண்களும் நையாண்டி மேளத்திக்கு நடனமாடிய காட்சிகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்களும் பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்படும்.
தொடர்ந்து அக்னி கரகம், அலகு குத்துதல், தீர்த்தக்குடம் அழைத்தல் ,பொங்கல் வைத்தல் கிடா வெட்டுதல் ஊர் பொதுமக்கள் சார்பாக சத்தாபரணம் வானவேடிக்கை போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்று தினந்தோறும் செல்வமாரியம்மன் சிம்ம வாகனத்தில் ஊர்வலமாக வருவது இந்த கோவிலின் சிறப்பு. இந்தக் கோயில் திருவிழாவில் நையாண்டி மேளத்திற்கு நளினமாக ஆடிய பெண்களின் வீடியோ தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.