மிரட்டல் ஆட்டத்தை வெளிப்படுத்திய தினேஷ் கார்த்திக்; பெங்களூர் அணி அசத்தல் வெற்றி.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூர் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் மிரட்டல் வெற்றி பெற்றுள்ளது.
15வது ஐபிஎல் தொடரின் 13வது போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், டூபிளசிஸ் தலைமையிலான பெங்களூர் அணியும் மோதின.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணியின் கேப்டன் டூபிளசிஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் அணியில் அதிகபட்சமாக ஜாஸ் பட்லர் 70* ரன்களும், ஹெய்ட்மர் 42* ரன்களும் எடுத்தனர்.
இதனையடுத்து 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை துரத்தி களமிறங்கிய பெங்களூர் அணிக்கு அந்த அணியின் துவக்க வீரர்களான டூபிளசிஸ் (29) மற்றும் அனுஜ் ராவத் (26) ஆகியோர் சுமாரான துவக்கம் கொடுத்தனர். இதன்பின் களத்திற்கு வந்த விராட் கோலி (5), டேவிட் வில்லே (0) மற்றும் ரூத்தர்போர்ட் (5) ஆகியோர் வந்த வேகத்தில் வெளியேறினர்.
இதன்பின் கூட்டணி சேர்ந்த தினேஷ் கார்த்திக் – சபாஷ் அகமத் ஜோடி, தங்களது சிறப்பான ஆட்டத்தின் மூலம் பெங்களூர் அணியை சரிவில் இருந்து மீட்டது. பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சபாஷ் அகமத் 26 பந்துகளில் 45 ரன்கள் எடுத்த போது விக்கெட்டை இழந்தார். சபாஷ் அகமத் விக்கெட்டை இழந்த பின்பும் அதிரடி ஆட்டத்தை கைவிடாத தினேஷ் கார்த்திக் 23 பந்துகளில் 44* ரன்கள் எடுத்து கொடுத்ததன் மூலம் 19.1 ஓவரிலேயே இலக்கை அசால்டாக எட்டிய பெங்களூர் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் மிரட்டல் வெற்றி பெற்றுள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பில் டிரண்ட் பவுல்ட் மற்றும் சாஹல் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். நவ்தீப் சைனி ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்.