உக்ரைன் ரெயில் நிலையத்தில் ரஷியா ஏவுகணை தாக்குதல் – 50 பேர் பலி.
உக்ரைன் மீது ரஷியா 45-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. போரை முடிவுக்கு கொண்டு வர பல நாடுகள் முயற்சித்த போதும் அந்த முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்து வருகின்றன. உக்ரைன் தலைநகர் கீவ், மரியப்போல், கார்கீவ், கார்சன் உள்பட பல்வேறு நகங்களில் ரஷிய படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.
ரஷிய படைகளின் தாக்குதலுக்கு உக்ரைன் ராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது. மேலும், ரஷியாவின் கட்டுப்பாட்டில் இருந்த சில பகுதிகளை உக்ரைன் படைகள் மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளன.
இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ராணுவ ஆயுதங்கள், தளவாடங்கள் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது. போர் காரணமாக உக்ரைனில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் அண்டை நாடுகளுக்கு வெளியேறி வருகின்றனர்.
இதற்கிடையில், உக்ரைனின் டான்பாஸ் மாகாணம் கர்மொடொர்ஸ்க் நகரில் உள்ள ரெயில் நிலையத்தில் நேற்று நூற்றுக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர். அவர்கள் டான்பாஸ் மாகாணத்தை விட்டு ரெயில் மூலம் வெளியேற நின்றுகொண்டிருந்தனர். அப்போது, அந்த ரெயில் நிலையத்தை குறிவைத்து ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில், ரெயில் நிலையத்தில் இருந்த பெண்கள், குழந்தைகள் உள்பட பலர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், கர்மொடொர்ஸ்க் நகரில் ரஷியா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 50 பேர் உயிரிழந்ததாக அந்த மாகாண கவர்னர் தெரிவித்துள்ளார். ரஷிய ஏவுகணை தாக்குதல் நடந்தபோது ரெயில் நிலையத்தில் பெண்கள், குழந்தைகள் உள்பட 4 ஆயிரத்திற்கும் அதிகமான அங்கு இருந்ததாக கவர்னர் தெரிவித்துள்ளார். அதேவேளை, ரெயில் நிலையம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தவில்லை என ரஷியா தெரிவித்துள்ளது.