அடுத்த பாராளுமன்ற அமர்வு வாரம் ஏப்ரல் 19 முதல் 22 வரை…..
பாராளுமன்றத்தை எதிர்வரும் ஏப்ரல் 19ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை கூட்டுவதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் (08) பிற்பகல் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றம் கூடும் அனைத்துத் தினங்களிலும் மு.ப 10.00 மணி முதல் 11.00 மணிவரை பாராளுமன்ற உறுப்பினர்களின் வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அத்துடன், இந்த அனைத்துத் தினங்களிலும் பிற்பகல் 4.30 மணி முதல் 4.50 மணிவரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதுடன், பி.ப 4.50 மணி முதல் பி.ப 5.30 மணிவரையான காலப் பகுதியில் முறையே ஆளும் கட்சி, எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணை மீதான விவாதத்தையும் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, ஏப்ரல் 19ஆம் திகதி பாராளுமன்றம் 10.00 மணிக்கு கூடவிருப்பதுடன், மு.ப 11.00 மணி முதல் பி.ப 4.30 மணிவரை மருத்துவக் கட்டளைச் சட்டத்தின் கீழ் சுகாதார அமைச்சரினால் ஆக்கப்பட்ட 2021.12.24ஆம் திகதிய 2259/54ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதி, விளையாட்டில் ஊக்குப் பதார்த்தப் பயன்பாட்டுக்கெதிரான சமவாயட் சட்டத்தின் கீழ் விளையாட்டுத்துறை அமைச்சரினால் ஆக்கப்பட்ட 2022.01.18 ஆம் திகதிய 2263/2ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதி என்பன விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.
ஏப்ரல் 20ஆம் திகதி மு.ப 11.00 மணி முதல் பி.ப 4.30 மணிவரை மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழ் நிதி அமைச்சரினால் ஆக்கப்பட்ட 2021.10.16ஆம் திகதிய 2249/50 ஆம் இலக்க, 2022.01.01ஆம் திகதிய 2260/78 ஆம் இலக்க மற்றும் 2022.01.01ஆம் திகதிய 2260/79 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானிகளில் வெளியிடப்பட்ட அறிவித்தல்கள், சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் 2022.01.11ஆம் திகதிய 2262/14 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானிப் பத்திரிகையின் ஊடாக வெளியிடப்பட்ட தீர்மானம் என்பவற்றை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டது.
ஏப்ரல் 21ஆம் திகதி மு.ப 11.00 மணி முதல் பி.ப 4.30 மணிவரை வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழ் நிதி அமைச்சரினால் விதிக்கப்பட்ட 2021.11.23 திகதிய 2255/8 ஆம் இலக்க, 2021.12.21ஆம் திகதிய 2259/9 ஆம் இலக்க, 2021.12.31ஆம் திகதிய 2260/72 ஆம் இலக்க, 2022 சனவரி 11 ஆம் திகதிய 2262/15 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகைகளில் வெளியிடப்பட்ட கட்டளைகள் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.
ஏப்ரல் 22ஆம் திகதி மு.ப 11.00 மணி முதல் பி.ப4.30 மணி வரை மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் போக்குவரத்து அமைச்சரால் ஆக்கப்பட்டு 2021.09.17ஆம் திகதிய 2245/31 ஆம் இலக்க, 2021.10.29ஆம் திகதிய 2251/63 ஆம் இலக்க, 2021.08.14ஆம் திகதிய 2240/37 ஆம் இலக்க விசேட வர்த்தமானி பத்திரிகைகளில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதிகளை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளவும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.