வாகனங்கள் இறக்குமதி தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு!
இலங்கையில் முன்னுரிமை அடிப்படையில் வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பில் பரிசீலிக்கப்பட வேண்டும் என மத்திய வங்கியின் புதிய ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
எந்தவொரு இறக்குமதிக்கும் வெளிநாட்டு நாணயத்தை விடுவிப்பது முன்னுரிமையின் அடிப்படையில் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பரிசீலிக்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை மத்திய வங்கியில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் குறித்து ஊடகவியலாளரின் கேள்விக்கு ஆளுநர் பதிலளித்தார்.
இறக்குமதிக்கான பணத்தை ஒதுக்கும் போது, பெரும்பான்மை மக்களுக்கு ஏற்படும் ஒட்டுமொத்த பாதிப்பையும் கருத்தில் கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எந்தவொரு அரசியல் தலையீடுகளும் இன்றி மத்திய வங்கியை சுயாதீனமாக செயற்பட வைக்கப் போவதாக நேற்றையதினம் பதவியை ஏற்றுக்கொண்ட போது ஆளுநர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.