பொருளாதார நெருக்கடி: இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு அகதிகளாக வரும் ஈழத் தமிழர்கள்

இலங்கையில் திருகோணமலை மற்றும் மன்னார் மாவட்டம் பேசாலையில் இருந்து அகதிகளாக 3 குழந்தை உட்பட 19 பேர் தனுஷ்கோடியில் தஞ்சமடைந்தனர், இன்று காலை அவர்கள் மீட்கப்பட்டு மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் அடைக்கப்பட்டனர்

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடியால் அன்றாட அத்தியாவசிய பொருட்கள் கூட கிடைக்காமல் வாழ வழியின்றி ஆளும் அரசுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் கடுமையான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நாளுக்கு நாள் அன்றாட பயன்பாட்டு பொருட்களின் விலை அதிகரித்து வருவதால் குடும்பம் குடும்பமாக இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு தனுஷ்கோடி வழியாக இடம்பெயருவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இன்று, அகதிகளாக இலங்கையிலிருந்து 3 குழந்தை உட்பட 19 பேர் தனுஷ்கோடி அடுத்த அரிசல்முனை ஒன்றாம் தீடை பகுதியில் தஞ்சமடைந்துள்ளனர்.

திருகோணமலையை சேர்ந்தடிலக்ஸ்ன், புலக்ஸில்லா, ஶ்ரீகரன், பரிளா, சின்சிகா, நாகேந்திரன், சுதா, விதுஸ்திகா, அஜய், அபிநயன் மற்றும் மன்னார் மாவட்டம் பேசாலை சேர்ந்த ஈஸ்வரன், ஆறுமுகம், திவாகரன், நவீன், கமலேந்திரன், விக்னேஷ் மேரி, கோடீஸ்வரன், கஸ்தூரி ஆகிய 10 நபர்கள் குடும்பத்துடன் வந்துள்ளனர்.

தனுஷ்கோடியில் இவர்கள் மீட்கப்பட்டு, புதுரோடு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு, அவர்களிடம் கியூ பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்திய பின்னர் மண்டபம் மரைன் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

மண்டபம் மரைன் காவல்துறையினர் விசாரணை நடத்திய பின்பு அவர்களை மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமிற்கு கொண்டு சென்றனர்.

ஏற்கனவே ஐந்து குடும்பங்களை சேர்ந்த 20 நபர்கள் அகதிகளாக வந்து மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் தங்கியுள்ள நிலையில் தற்போது மீண்டும் 3 குழந்தை உள்பட 19 பேர்கள் வந்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.