ரணில் இப்போதைக்கு பதவி விலக மாட்டார்?

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவிக்குப் பொருத்தமான ஒருவரைத் தெரிவு செய்யும் வரையில் கட்சியின் தலைவர் பதவியில் ரணில் விக்கிரமசிங்க தொடர்வதற்கான வாய்ப்புகள் உள்ளன எனத் தெரியவந்துள்ளது.

தான் பதவி விலகத் தீர்மானித்துள்ளார் எனவும், புதியவர் ஒருவரைத் தெரிவு செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் ரணில் விக்கிரமசிங்க கூறினார் என்று கட்சியின் பொதுச்செயலாளர் சில தினங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தார்.

இதன்படி ரவி கருணாநாயக்க , அகிலவிராஜ் காரியவசம் , தயா கமகே மற்றும் வஜிர அபேவர்தன ஆகியோரின் பெயர்கள் தலைவர் பதவிக்காகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளன எனவும், இதன்படி கட்சித் தலைவருடன் கலந்துரையாடி இறுதி முடிவெடுத்து மத்திய செயற்குழுவுக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், பரிந்துரைக்கப்பட்டுள்ள 4 பேரும் தலைமைப் பதவிக்குத் தகுதியற்றவர்கள் எனக் கட்சிக்குள்ளிருந்து எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன எனவும், இதனால் கட்சித் தலைமைப் பதவி தொடர்பாக இறுதித் தீர்மானம் எடுக்க முடியாத நிலைமை ஏற்பட்டதால் கட்சித் தலைவர் பதவியிலிருந்து உடனடியாக விலகாது இருக்க ரணில் விக்கிரமசிங்க ஆராய்ந்துள்ளார் எனவும் அறியமுடிந்துள்ளது.

இந்தநிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய உறுப்பினர்களின் விசேட சந்திப்பு நேற்று மாலை ரணில் விக்கிரமசிங்கவின் இல்லத்தில் நடைபெற்றுள்ளது.

இந்தச் சந்திப்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க , வஜிர அபேவர்தன, தயா கமகே, அகிலவிராஜ் காரியவசம், சாகல ரத்நாயக்க, நவீன் திஸாநாயக்க, அர்ஜுன ரணதுங்க ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

இதன்போது சிலர் கட்சியின் இடைக்காலத் தலைவராக முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், அந்தக் கோரிக்கைக்கு வஜிர அபேவர்தன உள்ளிட்ட சிலர் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சந்திப்பில் தனது நிலைப்பாட்டை அறிவித்துள்ள ரணில் விக்கிரமசிங்க கட்சிக்குப் பொருத்தமான தலைவர் ஒருவரே தற்போதைக்கு அவசியம் எனத் தெரிவித்துள்ளார். இதன்படி பொருத்தமான ஒருவர் தெரிவாகும் வரையில் ரணில் பதவியில் இருப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.