தமிழகத்தை திராவிட இயக்கங்கள் தவிர்த்து வேறு யாராலும் ஆள முடியாது: செங்கோட்டையன்
தமிழ்நாட்டை திராவிட இயக்கங்களை தவிர்த்து வேறு எவராலும் ஆள முடியாது என அதிமுக சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் பேசினார். அப்போது திமுக உறுப்பினர்கள் மேஜையை தட்டி அவரது கருத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.
சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செங்கோட்டையன்,2019-20ம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசின் போது உயர்கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை 51.4% ஆக உயர்ந்ததாகவும்,மாணவர்களின் வருகை பதிவையும் மாணவர்களின் தேர்வு முடிவையும் எஸ்எம்எஸ் மூலமாக அறிவிக்கும் திட்டத்தை அதிமுக அரசு கொண்டு வந்ததாகவும் கூறினார்.
மேலும், இந்தியாவிற்கே முன் மாதிரியாக கல்வி தொலைக்காட்சியை கொண்டு வந்த பெருமை அதிமுக அரசை சாறும் என கூறிய அவர், ஐடெக் லேப் மாணவர்களுக்கு பெரிதும் உதவியாக உள்ளது என்றும், மத்திய அரசே இந்த திட்டங்களை பாராட்டி உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், தேர்வு தேதிகளை பொறுத்தவரை கல்வி ஆண்டின் தொடக்கத்திலேயே அதிமுக அரசு அறிவித்துள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்பட்டதாகவும், எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் இந்த திட்டங்களை செயல்படுத்தினோம் என்றும் தெரிவித்தார்.
நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற வேண்டும் என்பது அதிமுகவின் நிலைப்பாடாக இருந்தாலும், இந்திய நாட்டிலேயே அதிமுக ஆட்சி காலத்தில் தான் நீட் பயிற்சி அளிக்கப்பட்டதாக குறிப்பிட்ட அவர், இதன் காரணமாகவே மாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்ளும் சூழல் உருவானது என்றும் கூறினார்.
தமிழ்நாட்டை திராவிட இயக்கங்களை தவிர்த்து வேறு எவராலும் ஆள முடியாது என தெரிவித்த அவர், தாலிக்கு தங்கம் திட்டத்தை கைவிடாமல் மறுபரீசலனை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். முன்னதாக தமிழ்நாட்டை திராவிட இயக்கங்கள் மட்டுமே ஆள முடியும் என செங்கோட்டையன் கூறியபோது, அதிமுக மட்டுமல்லாது திமுக உறுப்பினர்களும் மேசையை தட்டி தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர்.