எரிபொருள் விலை உயர்வு தொடர்பாக விமானத்தில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி வாக்குவாதம்

எரிபொருள் விலையேற்றம் குறித்து மத்திய அமைச்ச ஸ்மிருதி இரானி காங்கிரஸ் நிர்வாகி நெட்டா டிசோசா இடையிலான வாக்குவாதம் வைரலாகியுள்ளது.

நாடு முழுவதும் கடந்த 16 நாட்களில் எரிபொருள் விலை 14 முறை உயர்த்தப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் எரிபொருள் விலை ரூ. 10 வரையில் உயர்ந்துள்ளது.

அதிகபட்சமாக மும்பையில் பெட்ரோல் விலை சில்லறை விற்பனையில் ரூ. 120 வரையிலும், டீசல் விலை ரூ. 104 வரையிலும் விற்பனையாகின்றன.

இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ள மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, உக்ரைன் ரஷ்யா போர் காரணமாக எரிபொருள் விலையேற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறினார். மேலும் அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் ஏற்பட்டுள்ள விலையேற்றத்துடன் ஒப்பிடும்போது இந்தியாவில் குறைவாகவே உயர்த்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், மத்திய அமைச்சர் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி டெல்லியில் இருந்து அசாம் மாநிலம் கவுகாத்திக்கு சென்று கொண்டிருந்தார்.

விமானத்தில் காங்கிரஸ் கட்சியின் மகளிரணி தலைவி நெட்டா டிசோசாவும் இருந்துள்ளார். கவுகாத்தி வந்ததும், பயணிகள் கீழே இறங்கியபோது ஸ்மிருதியை பார்த்த டிசோசா, பெட்ரோல் டீசல் விலை உயர்வு குறித்து கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளிக்க மறுத்த ஸ்மிருதி இரானி, தயவு செய்து பொய் சொல்லாதீர்கள். வழியை மறிக்காமல் கீழே இறங்குங்கள். எனக்கு பின்னாலும் பயணிகள் கீழே செல்வதற்கு காத்திருக்கிறார்கள்” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய மத்திய அமைச்சர், கொரோனா காலத்தில் 80 கோடி ஏழைகளுக்கு 27 மாதங்களாக உணவு கொடுத்தோம் என்று தெரிவித்தார். இதையடுத்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் தொடர்ந்து நடைபெற்றது. இதுதொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.